/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைக்கு தொல்லை கொடுத்து 'ஸ்டேட்டஸ்' அ.தி.மு.க., பிரமுகருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம்
/
யானைக்கு தொல்லை கொடுத்து 'ஸ்டேட்டஸ்' அ.தி.மு.க., பிரமுகருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம்
யானைக்கு தொல்லை கொடுத்து 'ஸ்டேட்டஸ்' அ.தி.மு.க., பிரமுகருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம்
யானைக்கு தொல்லை கொடுத்து 'ஸ்டேட்டஸ்' அ.தி.மு.க., பிரமுகருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம்
ADDED : பிப் 18, 2024 02:19 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, அதிக வெளிச்சம் தரக்கூடிய முகப்பு விளக்குகளை எரியவிட்டு யானையை விரட்டிய அ.தி.மு.க., பிரமுகருக்கு, வனத்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலையில், அ.தி.மு.க., கட்சி கொடியுடன் காரில் ஒருவர், அதிக வெளிச்சம் தரக்கூடிய முகப்பு விளக்குகளை எரியவிட்டு, ரோட்டில் சென்ற யானையை விரட்டியுள்ளார்.
அச்சத்தில் அந்த யானை வேகமாக ஓட, இவர் காரை அதன் அருகே ஓட்டிச்செல்வது போன்றும், காரில் அதிக சப்தம் எழுப்பும் பாடல்கள் ஒலிக்க செய்வது போன்ற வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் விசாரித்ததில், கோட்டூரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மிதுன்,33, என்பது தெரிந்தது. இதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி கூறுகையில், ''கோட்டூரைச் சேர்ந்த மிதுன், ஆழியாறு அருகே நவமலையில் உள்ள அவரது தோட்டத்துக்கு கடந்த 8ம் தேதி சென்றுள்ளார். அதன்பின், மாலை நேரத்தில், நவமலையில் இருந்து திரும்பும் போது காட்டு யானையை வாகனத்தில் துரத்துவதை வீடியோ எடுத்து, 'வாட்ஸ் ஆப்'ல் 'ஸ்டேட்டஸ்' வைத்து இருந்தார். அதுசமூக, வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
''அதிக ஒளி தரக்கூடிய முகப்புவிளக்குகளை ஒளிர விட்டு, அதிக சப்தமாக பாடல்கள் ஒலிக்க செய்து, யானைக்கு இடையூறு செய்தது தெரியவந்தது.இதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ், வன விலங்குக்கு இடையூறு செய்ததற்காக, மிதுனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது,'' என்றார்.