/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்கள் மீது கற்கள் வீச்சு; கோவை ரோட்டில் பதற்றம்
/
வாகனங்கள் மீது கற்கள் வீச்சு; கோவை ரோட்டில் பதற்றம்
வாகனங்கள் மீது கற்கள் வீச்சு; கோவை ரோட்டில் பதற்றம்
வாகனங்கள் மீது கற்கள் வீச்சு; கோவை ரோட்டில் பதற்றம்
ADDED : ஜூலை 29, 2025 08:07 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், ரோட்டில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர், உறவுகள் இல்லாதோர் என பலரும், ரோட்டோரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதில், கிழிந்த அழுக்கான ஆடை, பார்க்கவே மிரட்டும் தோணியில் தாடியுடன் மனநலம் பாதிக்கப்பட்டோர் சுற்றுகின்றனர்.
அவர்கள், ரோடுகளை கடக்கும் போது வாகனங்கள் வருவதை கவனிக்காமல் வேகமாக ஓடுவது, ரோட்டிலேயே அமர்ந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி - கோவை ரோட்டில் மதியம், 12:00 மணிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர், அங்கு இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து ரோட்டில் வீசினார்.வாகனங்களை கண்டதும், கற்களை எடுத்து வீசினார். அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுநர்கள், அச்சத்துடன் ரோட்டை கடந்து சென்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக, கற்களை ஒவ்வொன்றாக வீசிய அந்த நபர், சிறிது நேரத்தில் பாட்டில்களையும் ரோட்டில் உடைத்தார். அங்கிருந்தோர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த நபரிடம் இதுபோன்று செய்யக்கூடாது என சாந்தமாக கூறினர்.
இதையடுத்து, ரோட்டின் மறுபுறம் சென்று, வாகனங்கள் மீது பாட்டிலை துாக்கி வீசினார். அங்கு இருந்தோர், அவருக்கு உணவு கொடுத்து இதுபோல செய்ய வேண்டாம் எனக்கூறி அனுப்பினர். இதனால், கோவை ரோட்டில் பதற்றம் ஏற்பட்டது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை ரோட்டில் சுற்ற விடாமல், காப்பகத்தில் சேர்க்க வேண்டும். அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என்றனர்.