ADDED : பிப் 07, 2026 05:25 AM
கோவை: சரவணம்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார், 32; மாற்றுத்திறனாளி. கடந்த, 31ம் தேதி காந்திபுரத்தில் இருந்து தடம் எண், 45 'சி' என்ற பஸ்ஸில் பயணம் செய்தார்.
அப்போது கண்டக்டர் செல்வகுமார், அவரது மாற்றுத்திறனாளிக்கான பஸ் பாஸை வாங்கிப் பார்த்தார். தொடர்ந்து அந்த அடையாள அட்டை செல்லாது எனக்கூறி, நந்தகுமாரை பாதி வழியில் இறக்கி விட்டார்.
இதுகுறித்து நந்தகுமார் அரசு போக்குவரத்துக் கழக வாட்ஸ்அப் புகார் எண்ணுக்கு புகார் தெரிவித்தார்.
நடவடிக்கை இல்லை. நந்தகுமார் கலெக்டரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. விசாரித்த போக்குவரத்து கழக அதிகாரிகள் செல்வகுமாரை பொள்ளாச்சியில் உள்ள பயிற்சி மையத்துக்கு, இரு தினங்கள் பயிற்சி எடுக்க அனுப்பி வைத்தனர். பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து அங்கு பயிற்சி எடுக்க அறிவுறுத்தினர்.
