/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்கள் தொல்லை; கருத்தடை மையம் இல்லை
/
தெரு நாய்கள் தொல்லை; கருத்தடை மையம் இல்லை
ADDED : ஜன 02, 2024 11:06 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் கருத்தடை மையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கோவை வடக்கு புறநகர் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சி உள்ளன. இந்த பகுதிகளில், தெரு நாய்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்பகுதிகளில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இப்பகுதியில் நூற்றுக்கணக்கான நாய்கள் பெருகி, தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் கடித்து குதறுகின்றன.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிப்பதால், அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இது குறித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், பயனில்லை. தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. உள்ளாட்சி நிர்வாகங்களின் சார்பில் பிடிக்கப்படும் நாய்கள் அருகில் உள்ள ஊர்களில் கொண்டு போய் விடப்படுகின்றன. சில நாட்களில் அவை மீண்டும் பழைய ஊர்களுக்கே திரும்பி வந்து விடுகின்றன. கோவை நகரில் சீரநாயக்கன்பாளையத்தில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை மையம் உள்ளது. அதுபோன்ற ஒரு மையத்தை, இப்பகுதியில் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ் கூறுகையில், 'தெரு நாய்களின் தொல்லை குறித்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தை அமைக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சிறப்பு முகாமை ஏற்படுத்தி, கால்நடை மருத்துவர்களின் உதவியோடு தெரு நாய்களை பிடித்து, அவ்வப்போது கருத்தடை செய்யும் பணியை அரசு கால்நடை துறை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.