/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்குவதில் கெடுபிடி சிறுநீரக மோசடி விவகாரம் எதிரொலி
/
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்குவதில் கெடுபிடி சிறுநீரக மோசடி விவகாரம் எதிரொலி
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்குவதில் கெடுபிடி சிறுநீரக மோசடி விவகாரம் எதிரொலி
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்குவதில் கெடுபிடி சிறுநீரக மோசடி விவகாரம் எதிரொலி
ADDED : பிப் 12, 2026 06:19 AM
கோவை: நாமக்கல் சிறுநீரக மோசடி புகார்களை தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஒப்புதல் குழு கண்காணிப்பு கெடுபிடிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழக உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில், 8,565 பேர் உள்ளனர். அதில், 91 சதவீதம் பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூளைச்சாவு அடைந்தவர்கள் மட்டுமின்றி, உறவினர்களிடம் இருந்தும் சிறுநீரகம் தானமாக பெற முடியும்.
நாமக்கல் மாவட்டத்தில் பல ஏழை எளிய மக்களின் சிறுநீரகங்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கண்காணிப்புகளில் கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கோவை மண்டல அளவிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒப்புதல் குழு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களின் கோப்புகளை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில், கோவை அரசு மருத்தவமனையில் இக்குழு கூடி ஆய்வு செயல்பாடுகளை மேற்கொள்கின்றது. சராசரியாக 14-15 பேருக்கு வாரந்தோறும் ஒப்புதலுக்கு கோப்புகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனை டீன் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒப்புதல் குழு பொறுப்பாளர் கீதாஞ்சலி கூறியதாவது:
கடந்த காலங்களில் மண்டல உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை குழுவில் நான்கு பேர் இருப்போம். தற்போது, 8 பேர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கின்றோம். தவிர, குழுவிற்கு சமர்ப்பிக்கும் முன்னர் கோப்புகளை முழுமையாக சரிபார்க்க நோடல் அலுவலர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எட்டு பேர் கொண்ட குழுவில், போலீஸ், வருவாய், சுகாதாரத்துறை, டாக்டர்கள் என பல்துறை பிரதிநிதிகள்இருப்பார்கள் ஒருவர் நிராகரித்தாலும் மீண்டும் ஒப்புதல் பெற இயலாது. மோசடிகளுக்கு இடமளிக்காமல் கண்காணிப்புகளை அதிகரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம், மதியம் 12 மணிக்குள் கமிட்டி நிறைவு பெற்றுவிடும். தற்போது, எவ்வளவு நேரம் ஆனாலும் முழுமையாக ஆய்வு செய்தே ஒப்புதல் வழங்கப்படுகிறது.
முன்பு, சந்தேகங்கள் ஏதும் இருந்தால் மாநில ஒப்புதல் குழுவுக்கு அனுப்பலாம். தற்போது, இக்குழுவின் முடிவே இறுதியானது. கோப்புகள் ஆய்வு செய்யும்போது குழுவினர், சிறுநீரகம் தானம் அளிப்பவர் மற்றும் பெறுபவரிடம் நேர்காணல் நடத்தும். பலர் கோப்புகளில் கொடுத்த தகவல்கள் ஒன்றாக இருக்கும்; நேரில் சொல்வது வேறொன்றாகவும் இருக்கும். இதனால், சற்று தாமதங்கள் என்பது தவிர்க்க இயலாது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடிகளை ஒருபோதும் அனுமதிக்க இயலாது.
இவ்வாறு, அவர் கூறினார்.

