/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் வழங்கிய மாத்திரை சாப்பிட்ட மாணவி மரணம்
/
பள்ளியில் வழங்கிய மாத்திரை சாப்பிட்ட மாணவி மரணம்
ADDED : மார் 09, 2024 01:05 AM
கோவை:கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் ராஜாமணி, 35, டிரைவர். மனைவி புவனேஸ்வரி, 31. இவர்களது, 6 வயது மகள் தியாஸ், சிங்காநல்லுார் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், 1 ம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு சில நாட்களுக்கு முன், பள்ளியில் சத்து மாத்திரை கொடுத்தனர். அதை அந்த குழந்தை, புத்தகப்பையில் வைத்து, அவ்வப்போது உட்கொண்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த, 5ம் தேதி மாணவிக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வயிற்று போக்கில் வெளியேறிய மாத்திரைகளைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையின் புத்தகப்பையை சோதனை செய்தபோது, அதில் ஏராளமான சத்து மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து, சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
பெற்றோர் சிலர் கூறுகையில், 'பள்ளிகளில் வழங்கப்படும் சத்து மாத்திரை, முறையான வழிகாட்டுதலின் படி வழங்கப்படுவதில்லை; மாவட்ட சுகாதாரத்துறை கண்காணிப்பதில்லை. பெற்றோர்களுக்கும் மாத்திரை வழங்கப்படுவது குறித்து தெரிவிக்கப்படுவதில்லை' என்றனர்.

