/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிகளில் இலவசம், வசதி தொடர்வதால் மாணவர் சேர்க்கை உயர்வு! தேர்ச்சி விகிதம் அதிகரிப்பால் பெற்றோர் ஆர்வம்
/
அரசு பள்ளிகளில் இலவசம், வசதி தொடர்வதால் மாணவர் சேர்க்கை உயர்வு! தேர்ச்சி விகிதம் அதிகரிப்பால் பெற்றோர் ஆர்வம்
அரசு பள்ளிகளில் இலவசம், வசதி தொடர்வதால் மாணவர் சேர்க்கை உயர்வு! தேர்ச்சி விகிதம் அதிகரிப்பால் பெற்றோர் ஆர்வம்
அரசு பள்ளிகளில் இலவசம், வசதி தொடர்வதால் மாணவர் சேர்க்கை உயர்வு! தேர்ச்சி விகிதம் அதிகரிப்பால் பெற்றோர் ஆர்வம்
ADDED : மே 21, 2025 11:49 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுவதாலும், தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளில், கட்டணம் இல்லா ஆங்கில வழி கல்வி ஒன்று முதல் பிளஸ், 2 வகுப்புகளுக்கு கற்பிக்கப்படுகிறது. மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர, மாணவர் மன்றம், கேரம் மற்றும் செஸ் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பொது அறிவை வளர்க்க நூலக வசதி, மாணவர்களின் தனி திறமையை வெளிக் கொண்டுவர ஆண்டு விழா, மாணவர்கள் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றல், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி, மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை அரசு மருத்துவர் வாயிலாக மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை, தூய்மையான கழிப்பிட வசதி, ஸ்மார்ட் போர்டுடன் கற்பித்தல் வசதி, அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டம், வாசிப்பு இயக்கம் ஆகியவை பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. இது தவிர, பாட புத்தகங்கள், வண்ண பென்சில், காலணி, சீருடைகள், நோட்டுகள், புத்தகம், மதிய உணவு, காலை உணவு உள்ளிட்டவை தமிழக அரசால் இலவசமாக பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பாலான அரசு பள்ளிகளின் பொதுத் தேர்வு முடிவுகள் சிறந்த தேர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளன.
இதனால், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
இது குறித்து, அரசு பள்ளி வகுப்புகளில் தங்கள் மாணவர்களை சேர்த்த பெற்றோர் கூறுகையில்,' தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் கட்டண உயர்வு அதிகரித்து வருகிறது. ஜூன் மாதத்தில் குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பும்போது பெருந்தொகை செலவிட வேண்டி உள்ளது.
தற்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படுவதால், எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியை விட்டு, அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறோம்' என்றனர்.
இது குறித்து, கல்வித்துறையினர் கூறுகையில்,' பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், 72 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், கடந்த ஆண்டு கூடுதலாக, 1200 மாணவ, மாணவியர் பல்வேறு வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டும், தொடர்ந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பல்வேறு பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, இதுவரை, 800 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். இதே போல அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுதோறும், சராசரியாக, 50 முதல், 100 மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்றனர்.