/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகல்நேர பாதுகாப்பு மையத்தில் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
/
பகல்நேர பாதுகாப்பு மையத்தில் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
பகல்நேர பாதுகாப்பு மையத்தில் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
பகல்நேர பாதுகாப்பு மையத்தில் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூலை 29, 2025 08:47 PM

கோவை; கோவையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக, குனியமுத்தூரில் இயங்கி வரும் பகல்நேரப் பாதுகாப்பு மையத்தில், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மாவட்டத்தில் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ், 2025-2026 கல்வியாண்டில் இதுவரை 4,900க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளி செல்லும் வயதுடைய மாற்றுத்திறன் மாணவர்களை பராமரிப்பதற்காகவும், அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வட்டாரத்திலும், பகல்நேரப் பாதுகாப்பு மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, பேரூர் வட்டாரத்தில் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் பகல்நேர மையத்தில், 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால், மையத்தை சுற்றியுள்ள வளாகம் சரிவர பராமரிக்கப்படாமல், புற்கள் அதிகமாக வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மழை காலங்களில், வளாகத்தில் தண்ணீர் தேங்கும் நிலையும் உள்ளது.
மையத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் முற்றிலும் பழுதடைந்துள்ளதால், குழந்தைகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த குப்பையும், புதரும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் மறைந்திருக்க சாதகமான சூழலை ஏற்படுத்தி, குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு, மைய வளாகத்தை சீரமைத்து, தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.