/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவி பாலியல் விவகாரத்தில்... யார் அந்த சார்? அ.தி.மு.க., ஆக்ரோஷ ஆர்ப்பாட்டம்
/
மாணவி பாலியல் விவகாரத்தில்... யார் அந்த சார்? அ.தி.மு.க., ஆக்ரோஷ ஆர்ப்பாட்டம்
மாணவி பாலியல் விவகாரத்தில்... யார் அந்த சார்? அ.தி.மு.க., ஆக்ரோஷ ஆர்ப்பாட்டம்
மாணவி பாலியல் விவகாரத்தில்... யார் அந்த சார்? அ.தி.மு.க., ஆக்ரோஷ ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2024 06:45 AM

கோவை: அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தெற்கு தாலுகா அலுவலகம் எதிரே, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகள், இளம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக, சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் குமுறு கின்றனர்.
பாலியல் பலாத்கார செயலலை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:
அண்ணா பல்கலையில் ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்துள்ளது. தி.மு.க., அரசு, அண்ணாதுரையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. தி.மு.க., உறுப்பினர் ஞானசேகரன், 'சார்' என்று சொல்லியுள்ளார்.
மரியாதைக்குரிய அந்த வி.ஐ.பி., யார் என்பது தெரிய வேண்டும். 2013 முதல், 2019 வரை ஞானசேகரன் மீது, 23 வழக்குகள் இருந்துள்ளன; ஆறு வழக்குகளில் குற்றவாளி ஆகியுள்ளார். அப்போது எங்கள் ஆட்சி; நடவடிக்கை எடுத்துள்ளோம். 2019க்கு பிறகு தி.மு.க., ஆட்சியில் ஒரு வழக்குகூட பதிவாகவில்லை. ஆக, இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பல்கலையில் நடந்த அநீதிக்காக, இதுவரை பதிவாளர் கைது செய்யப்படவில்லை. 'டங்ஸ்டன்' சுரங்கத்திற்கு அனுமதி கொடுத்ததே, தி.மு.க., அரசுதான்; அதற்கான ஆதாரத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட்டேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் பேசுகையில், ''அ.தி. மு.க., ஆட்சியில், கோவை வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க ரூ.167 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.54 கோடிக்கு பணிகள் முடிந்துள்ளன. தற்போது, அங்கு பழக்கடை, லாரிப்பேட்டை அமைக்க, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். மக்கள் வரிப்பணத்தை இந்த அரசு வீணடிக்கிறது,'' என்றார்.
முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது, யார் அந்த சார்? என்று கோஷங்களை அ.தி.மு.க.,வினர் எழுப்பினர்.
ரோட்டில் அமர்ந்த தொண்டர்களை, போலீசார் குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி, 'யார் அந்த சார்?' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.