/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாரிகள் அலட்சியத்தால் மாணவர்கள் பசியில் தவிப்பு
/
அதிகாரிகள் அலட்சியத்தால் மாணவர்கள் பசியில் தவிப்பு
அதிகாரிகள் அலட்சியத்தால் மாணவர்கள் பசியில் தவிப்பு
அதிகாரிகள் அலட்சியத்தால் மாணவர்கள் பசியில் தவிப்பு
ADDED : மார் 23, 2025 01:51 AM
வால்பாறை: வால்பாறையில் உள்ள பள்ளிகளில், நேற்று காலை சிற்றுண்டி வழங்காததால் மாணவர்கள் பசியுடன் பாடம் படித்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி சார்பில், 61 துவக்கப்பள்ளிகளில் படிக்கும், 1,136 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல், முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வால்பாறையில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு நேற்று காலை சிற்றுண்டி வழங்கவில்லை.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'கல்வித்துறை உத்தரவுப்படி நேற்று பள்ளிகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காலை நேர சிற்றுண்டி வழங்காததால், மாணவர்கள் பசியுடன் வகுப்பறைக்கு சென்றனர். இதுபற்றி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
வட்டாரக் கல்வி அலுவலர் பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, ''எத்தனை மாணவர்களுக்கு சிற்றுண்டி சமைக்க வேண்டும் என, நகராட்சியில் இருந்து எந்த அதிகாரியும் என்னை தொடர்பு கொண்டு கேட்கவில்லை,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் ரகுராமனிடம் கேட்டபோது, ''முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ், வாரத்தில் ஐந்து நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
''ஆனால், நேற்று பள்ளி செயல்படுவதாக சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி வாயிலாக நாங்கள் தொடர்பு கொண்டபோது, போன் அழைப்பையும் ஏற்கவில்லை. இதனால், நேற்று மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கவில்லை,'' என்றார்.
வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பள்ளி மாணவர்களுக்கு நேற்று காலை நேர சிற்றுண்டி வழங்கவில்லை. இதுபற்றி, ஆளுங்கட்சியினர் தரப்பில் அரசுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.