மாணவர்கள் உயர்கல்விக்காக 'உயர்வுக்கு படி' முகாம்
மாணவர்கள் உயர்கல்விக்காக 'உயர்வுக்கு படி' முகாம்
ADDED : ஆக 13, 2026 04:24 AM
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றும், உயர்கல்வியில் சேராத மாணவர்கள் மற்றும் பிளஸ் 2, 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் வகையில், கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை சார்பில், உயர்வுக்குபடி சிறப்பு முகாம் நடந்தது.
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்த முகாமில், சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு தலைமுறை மாற்றங்களும் கல்வியால் நிகழ்ந்துள்ளது. இம்மாற்றங்கள் தொடர்ந்து நிகழும் இத்தலைமுறையில், உயர்கல்வி கற்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.
கோவை முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வரவேற்று, மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டியதன் அவசியம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறித்து தெரிவித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன், என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் மஞ்சுளவள்ளி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அழகு மீனாள், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மகேஸ்வரி பேசினர்.
முகாமில், 30க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை, மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்படும் கல்வி நிதி உதவி, வங்கி கடன் வசதி குறித்து வழிகாட்டல் மற்றும் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பெற வழிவகை செய்யப்பட்டது. முகாமில், 57 மாணவர்கள் நேரடி சேர்க்கையில் கல்லுாரிகளில் இணைந்துள்ளனர்.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை வட்டாரத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நலன் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பயிலும், 130 மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
