ஓணம் பண்டிகை கொண்டாட்டம் பூக்கோலமிட்டு அசத்திய மாணவர்கள்
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் பூக்கோலமிட்டு அசத்திய மாணவர்கள்
ADDED : ஆக 25, 2026 04:51 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளியில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் விழாவை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, ஓணம் பண்டிகை கதை குறித்து நாடகம், திருவாதிரை நடனம், ஓணப்பாட்டு, புலியாட்டம், கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி பொருளாளர், ஆலோசகர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகையையொட்டி பெற்றோருக்கான அத்தப்பூ கோலப்போட்டி நடந்தது. அதில், படைப்பாற்றல் திறன்களை பெற்றோர் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டி நடந்தது. தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பிரகாஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
* கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணப்பண்டிகை வால்பாறையில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. அப்பர்பாரளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் திருச்செல்வி தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் முன்பாக பூக்கோலமிட்டு அசத்தினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதே போல் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
