
கோவை ; தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) மாணவர்களுக்கான ரத்ததான முகாம் ஒண்டிபுதுார் என்.சி.சி., கோவை மண்டல தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. என்.சி.சி., கோயம்புத்தூர் குரூப் சார்பில் நேற்று முதல் வரும், 22ம் தேதி வரை ரத்ததான முகாம் நடக்கிறது.
துவக்க விழாவில் கோவை மண்டல தலைமை ராணுவ அதிகாரி, குரூப் கமாண்டர் கர்னல் ராமநாதன், கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணபிரியா, ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை தின சிறப்பு மற்றும் ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 6 (தமிழ்நாடு) மருத்துவ கம்பெனி அதிகாரி மேஜர் அசோக்குமார், முன்னிலையில் நடந்த ரத்ததானம் முகாமில், 200க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை, அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி அலுவலர்கள் உதவியுடன், 60 யூனிட் ரத்தம் ரத்த வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும், 22ம் தேதி வரை ரத்த தானம் முகாம் நடக்க உள்ளது. இதில், 1,000-க்கும் அதிகமான மாணவர்கள் ரத்த தானம் வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பட்டாலியன் ராணுவ அதிகாரிகள், தேசிய மாணவர் படை அலுவலர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனை அலுவலர்கள் பங்கேற்றனர்.