/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
/
வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 20, 2025 10:39 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி அருகே, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கிணத்துக்கடவு அருகே, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், பக்கோதிபாளையம் அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து, சாலை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கல்லுாரி முதல்வர் சுதீஷ் தலைமை வகித்தார். பேரணியில், சாலை பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். வாகன பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முருகபூபதி, உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
உடுமலை
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், அமராவதி வனச்சரகம் சார்பில், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் சிறப்பு முகாம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜேஸ், அமராவதி வனச்சரகம் புகழேந்தி மற்றும் வனத்துறையினர், வித்யாசாகர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒன்பதாறு சோதனைச்சாவடி முதல் சின்னாறு வரை, உடுமலை - மூணாறு ரோட்டில் செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேரி பேக், என, 800 கிலோ பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்பட்டது.
அதே போல், திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் பகுதியிலும், பிளாஸ்டிக் கழிவு அகற்றும் முகாம் நடந்தது. மண்ணில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், 'நெகிழியை தவிர்ப்போம்; புவியை காப்போம்' என்ற தலைப்பில், சுற்றுலா பயணியர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில், சமீப காலமாக சுற்றுலா பயணியர் வருகையால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணியர் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
இந்நிலையில், சுற்றுலா பயணியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் துவங்கிய பேரணியை, ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி டி.எப்.ஓ., தேவேந்திரகுமார் மீனா துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட கல்லுாரி மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த பாதகைளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலர்கள் சுரேஷ்கிருஷ்ணா, கிரிதரன், கல்லுாரி பேராசிரியர்கள், இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் கலந்து கொண்டனர்.