/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையின் பாதையில் மாணவர்கள்; போலீசார் சல்லடைசோதனை
/
போதையின் பாதையில் மாணவர்கள்; போலீசார் சல்லடைசோதனை
ADDED : நவ 11, 2024 04:20 AM

தொண்டாமுத்தூர் : பேரூர் சுற்றுப்பகுதியில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
கோவை மாவட்டத்தில், சமீப காலமாக போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கல்லுாரி மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல்கள் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மாணவர்கள் சிலர், மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் போன்ற போதை வஸ்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக தெரியவந்தது.
அவற்றை விற்பனை செய்வதிலும் முன்விரோதம் ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், கஞ்சா வாங்க பணமில்லாததால், சுண்டக்காமுத்தூரில், நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து, அரிவாளை காட்டி மிரட்டி, பணம் பறித்த வழக்கில், கல்லூரி மாணவர்கள் உட்பட, 6 பேரை பேரூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களின் அறைகளில், நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் காலை, 10:00 மணி வரை, ஏ.டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையிலான, 74 போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் வைத்துள்ளனர்களா என சோதனை செய்தனர்.
பச்சாபாளையம், பேரூர், சுண்டக்காமுத்தூர், ஆறுமுககவுண்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள, 12 இடங்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதனால், அதிகாலை முதலே, அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
தொடர் விசாரணை
கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில், சமீப காலத்தில் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, பேரூர் சுற்றுப்பகுதியில் கல்லுாரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் சோதனை நடத்தினோம். போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு சில தகவல் மட்டும் கிடைத்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
- போலீசார்