தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் சொந்த ஊர் திரும்பிய மாணவர்கள்
தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் சொந்த ஊர் திரும்பிய மாணவர்கள்
ADDED : ஆக 18, 2026 09:02 PM
கோவை: தனியார் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் உதவித்தொகையுடன் சேர்ந்த மாணவர்களுக்கு, சமூக நீதி விடுதியில் இடம் கிடைக்காததால், பெரும்பாலானோர் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாரதி கூறுகையில், ‘‘பேஷன் டிசைன் படிப்பில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு உதவித்தொகையில் சேர்ந்தேன். எங்கள் குடும்பம் ஏழ்மையானது. சமூக நீதி விடுதியில் இடம் கிடைக்கும் என்றனர். இதுவரை இடம் கிடைக்கவில்லை.
அதிக பணம் செலவு செய்ய வசதி இல்லை. சொந்த ஊர் திரும்பிவிட்டேன். வேறு கல்லுாரியிலும் சேர முடியாத நிலை உள்ளது. சான்றிதழ்கள் கல்லுாரியிலேயே உள்ளன.
விரைந்து விடுதியை திறந்தால், எனது கல்வி பாதிக்கப்படாது. என்னுடன் சேர்ந்த மாணவியருக்கும் இதே நிலைதான். சொந்த ஊர் திரும்பிவிட்டனர்,’’ என்றார்.
தமிழ்நாடு அரசு கோவை மாவட்ட பட்டியல் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் செந்தில்ராஜ் கூறுகையில், ‘‘கட்டி முடித்து திறக்கப்பட்டும் மாணவர்கள் பயன்பாட்டுக்கு வராத புதிய விடுதிகள் ஒருபுறம் உள்ளன. அதேபோல், வெள்ளலூர் பகுதியில் செயல்படாமல் உள்ள சமூக நீதி விடுதியையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம்.
தற்போது விடுதி கிடைக்காமல் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு தற்காலிகமாக தங்கும் வசதி ஏற்படுத்தலாம். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும். புதிய விடுதி திறக்கப்பட்டதும் மாணவர்களை அங்கு தங்க வைக்கலாம், 'என்றார்.
