ADDED : செப் 23, 2026 06:54 PM
கருமத்தம்பட்டி: ‘குப்பையை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும்’ என, கல்லுாரி மாணவியர், கருமத்தம்பட்டி பகுதியில் வீடுவீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கருமத்தம்பட்டி நகராட்சியில் வரும் அக்., 1 முதல் குப்பையை தரம் பிரித்து வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தரம் பிரித்து வழங்காத வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி மாணவியர், தீரன் சின்னமலை நகர், சாரதாம்பாள் நகர், கே.ஆர்.மில் ரோடு, சந்தை கடைவீதி, சுப்பிரமணியர் கோவில் வீதி உட்பட பகுதிகளில், வீடு வீடாக சென்று, குப்பையை, நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
20 ஆயிரம் சதுர அடி கொண்ட வணிக வளாகங்கள், தினமும் 40 ஆயிரம் லிட்டர் நீர் உபயோகப்படுத்தும் நிறுவனங்கள், 100 கிலோவுக்கு மேல் குப்பை உருவாகும் நிறுவனங்கள், தாங்களாகவே தங்கள் சொந்த பொறுப்பில் தரம் பிரித்து அகற்ற வேண்டும். மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் நகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும். வரும் அக்., 1ம் தேதி முதல் குப்பையை தரம் பிரிக்காமல் வழங்கினால், அந்த நிறுவனங்கள், வீடுகளில் நகராட்சி நிர்வாகம் குப்பை பெறாது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
