/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி வளாகங்களில் 'குளம்' : மாணவர்கள் அவஸ்தை
/
பள்ளி வளாகங்களில் 'குளம்' : மாணவர்கள் அவஸ்தை
ADDED : அக் 17, 2025 11:37 PM

கோவை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவையில் சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, மாவட்டத்தில் செயல்படும் சில அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி வளாகங்கள் மழை நீரால் சூழப்பட்டு, தெப்பக்குளம் போல் காட்சியளிக்கின்றன. சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், இந்த நிலை மோசமாக உள்ளது. பள்ளி வளாகங்களில் இவ்வாறு நீர் தேங்குவதால், மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல சந்தர்ப்பங்களில், பள்ளி நிர்வாகம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்த பின்னரே, பம்பு மோட்டார் வாயிலாக வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீர் அப்புறப்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும், பள்ளி தொடங்கிய பிறகே, இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாணவர்களின் வருகை பாதிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பள்ளியின் இடைப்பட்ட நேரத்தில், மழை பெய்தாலும் வளாகம் முழுவதும் நீர் தேங்கிவிடுவதால், மாணவர்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர் என, தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.