/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோஜா பூ, இனிப்பு கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு
/
ரோஜா பூ, இனிப்பு கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 03, 2025 01:00 AM

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், நேற்று துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் இனிப்பு மற்றும் ரோஜா பூ கொடுத்து மாணவ, மாணவியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அன்னுார் வட்டாரத்தில் உள்ள 72 அரசு துவக்கப் பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகள், 16 நடுநிலைப் பள்ளிகள் என 91 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் நேற்று மாணவ, மாணவியருக்கு, விலையில்லாத பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. அன்னுார் வடக்கு துவக்க பள்ளியில் மாணவ, மாணவியருக்கு, ஆசிரியர்கள் ரோஜாப்பூ மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். புதிதாக முதல் வகுப்பில் சேர்ந்த மாணவ மாணவியருக்கு அரிசியில் எழுதி கற்பிக்கப்பட்டது.
வட்டார கல்வி அலுவலர் (வடக்கு) புல்லாணி, மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
அன்னுார் வட்டாரத்தில் நேற்றுவரை புதிதாக 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

