பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் ஆர்வமாக தேர்வு எழுதிய மாணவர்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் ஆர்வமாக தேர்வு எழுதிய மாணவர்கள்
ADDED : மார் 03, 2026 06:02 AM

- - நிருபர் குழு -:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இத்தேர்வை நேற்று, 7231 பேர் எழுதினர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 38 மையங்களில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. ஆர்வமுடன் வந்த மாணவர்கள், கூட்டாக அமர்ந்து படித்ததை திருப்பி பார்த்தனர்.
தொடர்ந்து, தேர்வு துவங்குவதற்கு முன், மாணவர்கள், விநாயகப் பெருமானை வணங்கி வழிபாட்டனர். மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில் காயமடைந்து, 'வாக்கர்' உதவியுடன் மாணவி ஒருவர் தேர்வு எழுத வநத்தார்.
தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு வினாத்தாளும், காலை, 10:15 மணிக்கு விடைத்தாளும் வழங்கப்பட்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, மாணவர்கள், 3,249, மாணவியர், 4,093 என மொத்தம், 7,342 பேர் விண்ணப்பித்தனர்.
அதில், மாணவர்கள், 3,185, மாணவியர், 4,046 என மொத்தம், 7,231 பேர் தேர்வு எழுதினர். மாணவர்கள், 64, மாணவியர், 47 என மொத்தம், 111 பேர் தேர்வு எழுதவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். அன்னியர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை.
தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது ராகுல் வர்ஷன், கந்தசாமி மெட்ரிக் பள்ளி, கணபதிபாளையம்: தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது; பயிற்சி செய்த பகுதிகளில் இருந்து மூன்று ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால், அவற்றை சரியாக எழுத முடிந்தது. மேலும், 2,4, மற்றும்,6 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததால் நன்றாக எழுதியுள்ளேன்.மனப்பாட பகுதி பலமுறை பயிற்சி செய்தததால், அதுவும் எளிதாக இருந்தது. முதல் தேர்வு நன்றாக எழுதியுள்ளேன்.
கீர்த்திகா, பாரஸ்ட்ஹில் அகாடமி மெட்ரிக் பள்ளி, காளியாபரம், ஆனைமலை: தமிழ் தேர்வு மிக எளிமையாக இருந்தது. எனினும், ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. மற்ற பகுதிகள் மிகவும் எளிமையாக இருந்தது. எங்கள் தமிழ் ஆசிரியர் பாடப்பகுதியில் உள்ளே இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு பயிற்சி அளித்ததால், தேர்வு எளிதாக எழுத முடிந்தது. எதிர்பார்த்ததை விட தேர்வு எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது.
விபூசணா, செண்பகம் மெட்ரிக் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி: வினாத்தாள் எளிதாக இருந்தது. ஒரு சில வினாக்கள், பயிற்சி வினாக்கள் தவிர பாடத்தின் உள்ளிருந்தும் கேட்கப்பட்டு இருந்தன. எதிர்பார்த்ததை விட வினாக்கள் மிக எளிமையாகவும், தெரிந்தவையாக இருந்ததால் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதியுள்ளேன். பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தாலும் முறையான பயிற்சிகள் செய்ததால் எளிதாக எழுத முடிந்தது.
சஹானா, கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பொள்ளாச்சி: தமிழ் தேர்வு மிக எளிமையாக இருந்ததால் முழு மதிப்பெண் கிடைக்கும் என உறுதியோடு இருக்கிறேன். எனது பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் திருப்புதல் தேர்வு மிகவும் பயனாக இருந்தது. அவ்வப்போது திருப்புதல் தேர்வுகளை எழுதியதால் தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிந்தது. தமிழ் முதல் தேர்வு மனதிருப்தியோடு எழுதியுள்ளேன்.
சுஜித், லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பொள்ளாச்சி: தமிழ் பொதுத்தேர்வில், ஒன்பது ஒரு மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டாலும் அதுவும் சிந்தித்து எளிமையாக எழுதும் வகையில் இருந்தது. மற்ற வினாக்களும் எதிர்பார்க்கப்பட்டவையே வந்தன.மிக எளிமையாக இருந்ததால் தேர்வு தன்னம்பிக்கையோடும், மகிழ்ச்சியாகவும் எழுதியுள்ளேன்.
உடுமலை தமிழ்ச்செல்வன், என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி: தமிழ்த்தேர்வு நான் எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்தது. பாடப்பகுதியில் உள்ளே இருந்து கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்களை நன்றாகவும், தெளிவாகவும், படித்ததால், எளிமையாக விடையளிக்க முடிந்தது. பாடங்களை நன்றாக படித்து, பள்ளியில், அதிக தேர்வுகளை எழுதி பார்த்ததால், அரசு வினாத்தாளுக்கு, என்னால் எளிதாக விடையளிக்க முடிந்தது.
பிரியதர்ஷினி, ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிச்சிக்கோட்டை: தமிழ்த்தேர்வில் பெரும்பாலான ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்கள், நன்கு படித்து தயாரான மாணவர்கள் மட்டுமே பதில் அளிக்க கூடிய வகையில் இருந்தது. யோசித்து பதில் அளிக்கும் வகையில் சில வினாக்கள் இருந்தது. பிற வினாக்கள், அனைத்தும் மிக எளிமையாக இருந்தது. தேர்வுக்கு நன்கு தயாரானதால், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
திலோத்தமி, வித்யநேத்ரா பதின்ம மேல்நிலைப்பள்ளி, கோமங்கலம்புதூர்: தமிழ்த்தேர்வில், அனைத்து வினாக்களும் மிகவும் எளிமையாக இருந்தன. உள்ளீட்டு வினாக்கள் ஒரு சிலவை இருந்தாலும், முன்னதாகவே பயிற்சி செய்திருந்ததால், அவை மிகவும் எளிமையாக இருந்தன. வினா எண் 20ல், முறை வைப்பு' என்பதற்குப் பதிலாக, 'முறை வைப்பது' என்று தவறுதலாக இடம் பெற்றிருந்தது. வினாக்கள் எளிமையாக இருந்ததால், ஆர்வத்துடன் தேர்வு எழுதினேன்.
குருபிரசாத் ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளி,உடுமலை: தமிழ்த்தேர்வில், ஒரு மதிப்பெண் எளிதாக இருந்தது. உரைநடை குறுவினா சற்று கடினமாக இருந்தது. மற்ற வினாக்கள் எளிமையாக இருந்தது. உள்ளீட்டு வினாக்களும் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தது. முதல் தேர்வு எளிமையாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
ஸ்ரீவர்ஷன், ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பள்ளபாளையம்: வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சிறிது கடினமாக இருந்தது. மனப்பாடப்பகுதி, சிறு வினாக்கள் மற்றும் நெடுவினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. நாங்கள் பள்ளியில் எழுதிய திருப்புதல் தேர்வுகள் நல்ல பயிற்சியாக அமைந்தது. திட்டமிடப்பட்ட பயிற்சி பெற்றிருந்ததால், பதட்டமின்றி தேர்வை எழுதினேன்.
கிணத்துக்கடவு கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, சேது சேனாபதி: தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்வி ஒன்று, இரண்டு மட்டும் கடினம். மற்ற படி அனைத்தும் எளிமையாக இருந்தது. படித்த பாடங்களில் இருக்கும் முக்கிய கேள்விகள் படித்ததால், நல்ல முறையில் எழுதியுள்ளேன். நிச்சயம் 85 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுப்பேன். தேர்வு எழுத நேரம் சரியாக இருந்தது. இத்துடன் எழுதியதை சரிபார்க்கவும் நேரம் இருந்தது.
ஜெரிஷ்,: தமிழ் தேர்வில் படித்த கேள்விகள் இருந்ததால் தேர்வு எளிமையாக இருந்தது. பாடத்தின் உள்பகுதியில் இருந்து சில ஒரு மதிப்பெண் கேள்விகள் இருந்ததால் அது மட்டும் சற்று கடினமாக இருந்தது. மற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி உள்ளேன். தேர்வு எழுத நேரம் சரியாக இருந்ததுடன், 15 நிமிடங்களுக்கு முன்பே எழுதி முடித்தேன். நிச்சயம் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
வால்பாறை பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை தாலுகாவில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக ஐந்து பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கபட்டுள்ளன. முதல் நாளான நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது.இதில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும், 11 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.322 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இலக்கியா: பிளஸ் 2 முதல் நாள் தேர்வு என்பதால் மையத்திற்கு செல்லும் போது சிறிது பயம் இருந்தது. ஆனால் வினாத்தாள் வாங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது. படித்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்டகப்பட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். ஒரு சில வினாக்கள் கடினமாக இருந்தாலும், பிற வினாக்கள் ஈசியாக இருந்ததால் தேர்வை நன்றாக எழுதியுள்ளேன்.
ஆனந்தி: தமிழ் மொழித்தேர்வு எதிர்பார்த்தது போல வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். ஒன்று மற்றும் ஐந்து மதிப்பெண்களுக்கான வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. படித்த பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை பயமின்றி தெளிவாக எழுதியுள்ளேன்.
