ADDED : ஜன 08, 2024 11:08 PM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதுார் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட பெரிய கிராமங்கள், 40க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் என 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 12 வார்டுகள் உள்ளன. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர், மருதுார் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இத்திடத்தில் வேலை செய்வோர் தொடர்பான, ஜாப் கார்டு குறித்து ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மூன்று நாட்கள் இந்த விசாரணை நடைபெறும். விசாரணை தொடர்பான அறிக்கை கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும்,''என்றார்.--