/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வயநாடு போல் நடக்காமல் இருக்க ஆய்வு: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
/
வயநாடு போல் நடக்காமல் இருக்க ஆய்வு: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
வயநாடு போல் நடக்காமல் இருக்க ஆய்வு: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
வயநாடு போல் நடக்காமல் இருக்க ஆய்வு: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
ADDED : செப் 20, 2024 09:30 AM

கோவை: ''கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவம் போன்று தமிழகத்தில் நடக்காமல் இருக்க ஆய்வுகள் செய்துவருகிறோம்,'' என, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனர் கூறினார்.
கோவை வனக்கல்லுாரி மைதானத்தில், 27வது மாநில வனத்துறை ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின; இன்று நிறைவடைகிறது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது:
தமிழக அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து வருகிறது.
கடந்த ஆண்டு அகில இந்திய வனத்துறை விளையாட்டு போட்டியில், 18 தங்கம், 16 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களுடன் தமிழகம் ஐந்தாவது இடத்தை பிடித்தது. 28வது அகில இந்திய வனத்துறை விளையாட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தின் வனப்பரப்பை, 10 ஆண்டுகளில், 23.76 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக அதிகரிக்க, 13 ஆயிரத்து, 500 சதுர கி.மீ., பரப்பளவில் நாட்டு மரங்களை வளர்த்து காடுகளை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
பின், அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:
வனத்துறையில், 2,300 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத 'ரிசார்ட்'கள் குறித்து தகவல் அளித்தால் மாவட்ட நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.
'டிரக்கிங்' செய்ய 40 இடங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவம் துரதிஷ்டவசமானது. தமிழகத்தில் நடக்காமல் இருக்க தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் மழைக்காலத்தில் மண் சரிவு ஏற்படும் இடங்கள் கண்டறிந்து ஆய்வு செய்துவருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
வனத்துறை தலைவர் சுதான்சு குப்தா, அரசு முதன்மை செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.