ADDED : அக் 26, 2025 08:46 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொகுதியில், மினி ஸ்டேடியம் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ. தொகுதி நிதி, 50 லட்சம் என மொத்தம், 3 கோடி ரூபாய் செலவில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது.
அதில், பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இப்பணிகளை நேற்று கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சன்கித் பல்வந்த் வாகே, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி ஜோதிநகர், வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கூடுதல் கலெக்டர் பார்வையிட்டு மினி ஸ்டேடியம் அமைக்க போதுமான இட வசதி குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ண குமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

