/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலை யூரியாவை தவறாக பயன்படுத்த கூடாது!
/
மானிய விலை யூரியாவை தவறாக பயன்படுத்த கூடாது!
ADDED : ஜன 03, 2025 10:08 PM
கிணத்துக்கடவு, ;மானிய விலை யூரியாவை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் விவசாயம் சார்ந்த பகுதிகள் அதிகமாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் விதை மற்றும் உரத்தை மானிய திட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை வாயிலாக பெற்று செல்கின்றனர்.
இதில், விவசாய பயன்பாட்டிற்கான மானிய விலை யூரியாவை, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நபர்கள் மீது, 3 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்புக்கேற்ப அபராதம் விதிக்கப்படும்.
மேலும், தொழிற்சாலை பயன்பாட்டிற்காக யூரியா வாங்கும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை யூரியா உரிமம் பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான உரங்களை வாங்க வேண்டாம், என, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மானிய விலை உரத்தை, விற்பனை செய்யும் உரிமம் பெற்ற மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், உரங்களை பிற மாநிலம் அல்லது மாவட்டங்களுக்கு அனுப்புவதோ பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவோ கூடாது.
உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனத்திடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.
குறிப்பாக, கடைகளில் யூரியா வழங்கும் போது விவசாயப் பயன்பாட்டிற்கு மட்டுமே விற்க வேண்டும். இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.