/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புதிய பட்டு விவசாயிகளுக்கு 4.94 லட்சம் ரூபாய் மானியம்'
/
'புதிய பட்டு விவசாயிகளுக்கு 4.94 லட்சம் ரூபாய் மானியம்'
'புதிய பட்டு விவசாயிகளுக்கு 4.94 லட்சம் ரூபாய் மானியம்'
'புதிய பட்டு விவசாயிகளுக்கு 4.94 லட்சம் ரூபாய் மானியம்'
ADDED : ஆக 18, 2025 09:36 PM

கோவை; கோவை மாவட்டத்தில் புதிதாக பட்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ரூ.4.94 லட்சம் வரை தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார், ஆலாந்துறை, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 1500 ஏக்கர் பரப்பளவில் பட்டு வளர்ப்பு விவசாயம் செய்யப்படுகிறது.
இதில், 750 விவசாயிகள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டு வளர்ப்பில் புதிய விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை மானியம் வழங்க முன்வந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், ஒரு ஏக்கரில் உயர்ரக மல்பெரி நடவு செய்யவும், பட்டு வளர்ப்பு மனை, புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பட்டு வளர்ச்சி பயிற்சி வழங்கவும், 3.37 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்தால், 4.94 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இது குறித்து, கோவை பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் திலகவதி கூறியதாவது:
பட்டு வளர்ப்பு தொழில், இன்றைக்கு நல்ல லாபம் தரும் தொழிலாக உள்ளது. இந்த தொழில் செய்வது மூலம் மாதம் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
புழு வளர்ப்புக்கான காலம் 15 நாட்கள் மட்டும்தான். பட்டுப்புழுக்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கொடுத்தால் போதும். மற்ற விவசாயத்தை போல் இதற்கு மருந்து தெளித்தல், உரமிடுதல் தேவை இருக்காது.
பட்டுப்புழு கழிவுகள் சிறந்த உரமாக பயன்படுகிறது. தோட்டத்துக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துவிட்டால், நீர் பாய்ச்சும் வேலை சுலபமாகிவிடும். புதிதாக இந்த தொழில் செய்ய வருபவர்களுக்கு மத்திய, மாநில அரசு அலுவலர்களின் ஆலோ சனை மற்றும் ஆறு நாட்கள் தொழில் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
அதனால் புதியவர்கள் பட்டு வளர்ப்பில் ஆர்வத்துடன் வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு பிறகு, பட்டு விவசாயத்தில் புதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவை பட்டு அங்காடிக்கு, 175 முதல் 200 விவசாயிகள் மாதம், 25 டன் பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பட்டு வளர்ப்பு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.