சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடுமையான முயற்சி, பயிற்சிக்கு பின்னரே கிடைக்கும் வெற்றி! / கடுமையான முயற்சி, பயிற்சிக்கு பின்னரே கிடைக்கும் வெற்றி!
/
கோயம்புத்தூர்
கடுமையான முயற்சி, பயிற்சிக்கு பின்னரே கிடைக்கும் வெற்றி!
ADDED : மார் 27, 2025 07:14 AM
'தினமலர்' நாளிதழ் வழிகாட்டி நிகழ்வில், பொறியியல் தொழில்நுட்ப படிப்புகள் குறித்து, அமிர்தா பல்கலை மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ரமேஷ்குமார் விளக்கமளித்தார்.அவர் பேசியதாவது:அறிவியல், இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம் - இந்த மூன்றுக்கும் உள்ள வேறுபாடுகளை, முதலில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இருப்பதை கண்டுபிடிப்பது அறிவியல். இல்லாத ஒன்றை உருவாக்குவது பொறியியல். கண்டுபிடித்ததை சமூகத்திடம் கொண்டு சேர்ப்பது தொழில்நுட்பம்.சிறந்த இன்ஜினியர் ஆக வேண்டுமெனில், கணிதத்திறன், புதிய கண்டுபிடிப்பு , லாஜிக்கல் சிந்தனை, புதிய சிந்தனைகள், தொழில்நுட்ப திறன், அனலிடிக்கல் திறன், குழுவுடன் இணைந்து பணிபுரியும் செயல்பாடுகள், தொடர்புத்திறன், மொழிப்புலமை, சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களை ஏற்று செயல்படும் திறன், தொடர்ந்து கற்றல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.ஐ.ஓ.டி., ஏ.ஐ., டிஜிட்டல் பிரிண்ட்ஸ், ரோபோடிக்ஸ், 3டி பிரிண்டிங், ஆட்டோமேஷன், மெஷின் லேர்னிங், உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. கோர் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்வது, சிறந்த வாய்ப்புகளை தரும்.இந்தியாவில், 2030ல் 6 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தை மேம்படுத்த ஆட்டோமேஷன் துறை முக்கிய பங்கு வகிக்கும். இதுபோன்ற சூழலில், திறன்மிக்க இன்ஜினியர்களின் தேவை அதிகம் தேவைப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
''பிளஸ்2 முடித்து கல்லுாரி தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்கள், கட்டாயம் போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை பெற்று இருக்க வேண்டும்,''என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன் பேசினார்.அவர் பேசியதாவது:அரசு போட்டித்தேர்வுகளை பொறுத்தவரையில், வாய்ப்புகள் பல உள்ளன. டி.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., எம்.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ், தமிழ்நாடு சீருடை பணி, விமானப்படை, ராணுவம், அறநிலையத்துறை, வனத்துறை என பல பிரிவுகளில் ஆண்டுதோறும் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.பத்தாம் வகுப்பு, பிளஸ்2 முடித்தவர்களும், பல்வேறு தேர்வுகளில் பங்கேற்க முடியும். இதுபோன்ற போட்டித்தேர்வுகள் குறித்து, தமிழக மாணவர்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. கல்லுாரி முதலாமாண்டு முதலே, இதுபோன்ற தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு பொறுமை அவசியம். வெற்றி பெறுவது எளிது. கல்லுாரி முதலாமாண்டு முதல் செய்தித்தாள் வாசித்தல், ஆங்கிலப்புலமை மேம்படுத்துதல், இத்தேர்வுக்கான பயிற்சிக்கு என நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். பயிற்சியை முறையாக மேற்கொண்டால் , கல்லுாரி முடித்து வெளிவரும் போது நல்ல அரசு பணியுடன் அதிகாரத்தில் அமர முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
'ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் துறையில், வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன' என, எஸ்.என்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் பேசினார்.அவர் பேசியதாவது:ஆட்டோமேஷன் துறையில் வளர்ச்சி, மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அதற்கேற்ப நாம் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்கள், வகுப்பறைகளை தாண்டி, திறன்களை வளர்த்திக்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். உணவு, உற்பத்தி, வேளாண்மை, மருத்துவம் அனைத்திலும், ஆட்டோமேஷன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டிகள் அதிகம் உள்ள, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை தேர்வு செய்வதை காட்டிலும், போட்டிகள் குறைவாக உள்ள ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் துறையை தேர்வு செய்வது, வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, எந்த துறை நிலைத்து நிற்குமோ, அத்துறையில் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய சிந்தனை மற்றும் கண்டுபிடிப்பு, கிரிட்டிக்கல் திங்கிங், பிராப்ளம் சால்விங் மற்றும் அனலிடிக்கல் திங்கிங் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்ள். அனைத்து துறைகளும் ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் துறை சார்ந்து நகரும் சூழலில், இத்துறையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.
வழிகாட்டி நிகழ்ச்சியில், 'வான் அறிவியல்' எனும் தலைப்பில், ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(ஐ.எஸ்.ஆர்.ஓ.,) சதீஸ் தவான் விண்வெளி மைய இயக்குனர் ராஜராஜன் பேசியதாவது:இன்றைய மாணவர்களுக்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இன்று இந்தியர்கள் வானியலில் சாதித்துள்ளனர். இன்று பேசும் பொருளாக வானியல் உள்ளது. கடந்த, 50 ஆண்டுகளில் வானியல் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. மனித வளத்தின் அடுத்த கட்டம், வானியல் ஆராய்ச்சி தான். அடுத்த கோள்களில் வசிக்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகள் தான், இன்று முன்னணியில் உள்ளன. ஆகவே, வானியல் துறையில் உள்ள எந்த படிப்பை வேண்டுமானாலும் படிக்கலாம். இயற்பியல் படிப்பை படித்தால் வானியலில் சாதிக்கலாம்.வானியல் குறித்த கல்விக்கு, ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. செயற்கைகோள்களை யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்ய, மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. சந்திரன் குறித்த ஆராய்ச்சியில், இந்தியா முன்னணியில் உள்ளது. சந்திரனின் முழுத்தகவல்களையும் உலகிற்கு, இந்தியா தான் கொடுத்துள்ளது. நீங்கள் வானியல் அறிவை கற்றுவிட்டால் உலகளவில் சாதிக்கலாம். இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம். என்ன படிக்கிறீர்களோ, அதில் சாதிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில், 'நுழைவுத்தேர்வுகள் மற்றும் கல்வி உதவித்தொகை' குறித்து, கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசியதாவது:அரசு தரப்பில் மட்டும் பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு, 80க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், 75 தேர்வுகளில் பிளஸ்2 மதிப்பெண்களை பெரிதாக எடுப்பதில்லை. நுழைவுத்தேர்வுகள் குறித்து அறிந்துகொள்ளாமல் இருப்பது, வாய்ப்புகளை தவற விடுவதற்கு சமம். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்களே, வெற்றியாளர்களாக திகழ முடியும். மிக குறைந்த கட்டணத்தில், தரமான கல்வி தரும் அரசு நிறுவனங்கள் பல உள்ளன. அதை அறிந்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் எழுத வேண்டும்; பலவற்றில் விண்ணப்பித்தாலே வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். அறிவு என்பதுதான் அதிகாரம், பணம் அனைத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களின் வேகத்திற்கு இணையாக, நாம் திறன்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.ஆர்வம் உள்ள துறை, வேலைவாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து, படிப்பது கல்வி அல்ல. உலகின் எந்த இடத்திலும், எப்படிப்பட்ட சவால்களையும் சமாளித்து விடுவேன் என்ற தன்னம்பிக்கையை அளிப்பதே கல்வி; அதுபோன்ற தன்னம்பிக்கை வரும் வகையில், நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வெற்றி என்பது எளிதல்ல; கடுமையான பல முயற்சி, பயிற்சிகளுக்கு பின்னரே கிடைக்கும். தன்னம்பிக்கையை மேம்படுத்தி, வாய்ப்புகளை பயன்படுத்தும் அனைவரும், கட்டாயம் சாதனையாளர்களாக திகழ முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
சி.ஏ., மற்றும் காமர்ஸ் படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து, இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் தென்னிந்திய கவுன்சில் உறுப்பினர் ராஜேஷ் பேசியதாவது:அறிவியலை தேடிச் செல்லும் மாணவர்களுக்கு இணையாக, வணிகவியலை தேடும் மாணவர்களின் எண்ணிக்கையும் உள்ளது. வணிகவியலில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சி.ஏ., படிப்பில் சாதிக்க முடியும். எந்த நிறுவனமாக இருந்தாலும், அந்நிறுவனத்துக்கு பட்டயக்கணக்காளரின் தேவை முக்கியம். மிகவும் பொறுப்புள்ள பதவி. பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் சி.ஏ., படிப்புக்கு பதிவு செய்யலாம். பிளஸ்2 முடித்த பின் தேர்வு எழுதலாம். இதில் பவுண்டேஷன், இன்டர்மீடியேட், இறுதி என, மூன்று நிலைகள் உள்ளன. ஆண்டுக்கு மூன்று முறை தேர்வுகள் நடக்கும். பதிவு செய்த நான்கு மாதங்களுக்கு பின்னர் தேர்வு எழுதினால், தோல்விகளை தவிர்க்கலாம். பவுண்டேஷன் படிக்கும் போது, கல்லுாரிகளில் சேர எவ்வித தடையும் இல்லை. பவுண்டேஷன் முடித்த பின், இன்டர்மீடியேட் வரும். இதில் ஆறு தாள்கள் நடக்கும். தனித்தனி தாள்களில், குறிப்பிட்ட சதவீதம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண்ணிலும் குறிப்பிட்ட சதவீதம் பெற்றிருப்பது அவசியம். ஒன்பது லட்சம் மாணவர்கள் இக்கல்வியை பயில்கின்றனர். தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களும் பட்டயக்கணக்காளராக முடியும். இக்கல்விக்கு ஏராளமான கல்வி உதவித்தொகையும் உள்ளது. ஓய்வு என்பதும் கிடையாது.இவ்வாறு, அவர் பேசினார்.
வழிகாட்டி நிகழ்வில், கிருஷ்ணா கல்விக்குழும பேராசிரியர் பொற்குமரன், கோர் இன்ஜினியரிங் துறையின் எதிர்காலம் குறித்து விளக்கமளித்தார்.அவர் பேசியதாவது:சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவை அடிப்படை இன்ஜினியரிங் துறைகள். அடிப்படை இன்ஜினியரிங் துறைகளே உலகை ஆள்கின்றன; இனி உலகை ஆளப்போகும் துறைகளும் இவைதான். இன்ஜினியரிங் இல்லாத துறைகளே இல்லை. தற்போது அனைத்து துறைகளும் ஆட்டோமேஷன் சார்ந்த பெரிய அளவில் மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் அடைந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த, இன்ஜினியரிங் கட்டமைப்பு தற்போது இல்லை.படிக்கும் போதே ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக, தொழில்முனைவோராக திகழமுடியும். தற்போதுள்ள இன்ஜினியரிங் கட்டமைப்பில், சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, ஐ.ஓ.டி., என அனைத்து துறை மாணவர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. சிவில் படிக்கும் மாணவர் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த அறிவையும், எலக்ட்ரானிக்ஸ் மாணவன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட அறிவையும் ஒருங்கிணைந்து பெறுகிறார். இன்ஜினியரிங் பிரிவில் ஆர்வம் உள்ள எந்த துறையையும், தேர்வு செய்து படிக்கலாம். திறன்கள், தன்னம்பிக்கை மேம்படுத்திக்கொண்டால் சிறப்பான எதிர்காலத்தை பெறலாம். படிக்கும் காலங்களில், அரசு, தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் கண்டுபிடிப்பு சார்ந்த போட்டிகளில், கட்டாயம் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.