/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு
/
புதிய குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு
ADDED : பிப் 06, 2024 10:13 PM

மேட்டுப்பாளையம்:திருப்பூர், அவிநாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு செல்லும், புதிய குடிநீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
மேட்டுப்பாளையம் சிறுமுகை இடையே, பவானி ஆற்றில் இருந்து, 16க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு, தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதன் வாயிலாக பல லட்சம் பொதுமக்கள், குடிநீர் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், 165 கிராமங்களுக்கும், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில், 107 கிராமங்களுக்கும் என, மொத்தம், 272 கிராமங்களுக்கு, சிறுமுகை அருகே குத்தாரிபாளையத்தில் பவானி ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுக்க, 36.22 கோடி ரூபாய் செலவில், புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், இத்திட்டத்தை கண்காணித்து வருகிறது. தற்போது இதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் தொடக்க விழா நடைபெறவில்லை.
சிறுமுகை அருகே, நீலிபாளையம் சாலை சந்திப்பில் உள்ள பள்ளத்தில், குடிநீர் குழாய் கொண்டு செல்ல, தனியாக உயர் மட்ட தூண்கள் அமைத்து, அதன் மீது கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
இந்த கான்கிரீட் தளத்தின் மீது, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இத்திட்டத்தின் நீரேற்று நிலையம் குத்தாரிபாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மின் மோட்டார் வாயிலாக, தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது. தற்போது, இத்திட்டத்தின் குடிநீர் பம்பிங் செய்யும், சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. நேற்று மதியம் திடீரென, சிறுமுகை -நீலிபாளையம் சாலை சந்திப்பு அருகே, கான்கிரீட் தளத்தின் மீதுள்ள இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக தண்ணீர் பம்பிங் செய்வது நிறுத்தப்பட்டது.
இக்குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, விரைவில் திட்டத்தை துவக்கி, மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

