/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகளால் தவிப்பு
/
மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகளால் தவிப்பு
ADDED : மார் 11, 2024 01:58 AM
பொள்ளாச்சி:கோட்டூர் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே மேம்பாலத்தில், மின் விளக்குகள் சரிவர எரியாததால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி - ஆழியாறு சாலையை இணைக்கும் வகையில், கோட்டூர் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில தினங்களாக, சில மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. மேம்பாலத்தில், இரவு நேரத்தில், இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: மேம்பாலத்தில் அனைத்து விளக்குகளும் முறையாக எரியாததால், விபத்து அபாயம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம், முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுஒருபுறமிருக்க, மேம்பாலத்தில், முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச்செல்ல சில வாகன ஓட்டுநர்கள் முற்படுகின்றனர். இதனால், விபத்தும் ஏற்படுகிறது.
வாகனத்தின் வேகத்தை குறைக்கும் வகையில், சிறிய அளவிலான வேகத்தடை அமைத்தும் எவரும் கண்டுகொள்வதில்லை. மேம்பாலத்தில் வாகனங்களை முந்திச் செல்லக் கூடாது என, அறிவிப்பு இடம்பெறச் செய்ய வேண்டும்.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

