/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை கால மக்காச்சோள விதைப்பை தை முதல் வாரத்துக்குள் முடிக்க வேண்டும்
/
கோடை கால மக்காச்சோள விதைப்பை தை முதல் வாரத்துக்குள் முடிக்க வேண்டும்
கோடை கால மக்காச்சோள விதைப்பை தை முதல் வாரத்துக்குள் முடிக்க வேண்டும்
கோடை கால மக்காச்சோள விதைப்பை தை முதல் வாரத்துக்குள் முடிக்க வேண்டும்
ADDED : ஜன 15, 2025 12:06 AM

கோவை; ''கோடை கால மக்காச்சோள சாகுபடியில் விதைப்பை, தை முதல் வாரத்துக்குள் முடித்து விட வேண்டும். வெப்பத்தால் மணி பிடிப்பது பாதிக்கப்பட்டு, மகசூல் குறையும் என்பதால், தை, 3,4வது வாரங்களில் விதைப்பதைத் தவிர்க்க வேண்டும்,'' என, வேளாண் பல்கலை சிறுதானியங்கள் துறைத் தலைவர் சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:
கோடை கால மக்காச்சோள சாகுபடியைப் பொறுத்தவரை, மிக முக்கியமாக நடவை, தை முதல் வாரத்துக்குள், முன்பே முடித்து விட வேண்டும். தை 3வது, 4வது வாரங்களில் எந்த மாவட்டத்திலும் நடவை மேற்கொள்ளக்கூடாது.
தை முதல் வாரத்துக்குள்
குறைந்த வயதுடைய, 100-105 நாட்கள் கொண்ட, நல்ல வீரிய ரக ஒட்டு ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். 110 நாட்களுக்கு மேல், வயது கொண்ட வீரிய ஒட்டு ரகங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், மக்காச்சோளம் பூக்கும் தருணத்தில் (60 நாட்களில்) ஏப்., மாதத்தில் வெப்பநிலை அதிகமாக உயர்வதால், மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டு, மணி பிடிப்பது மிக மிகக் குறைந்துவிடும்; மகசூல் பாதிக்கப்படும். எனவே, விதைப்பை தை முதல் வாரத்துக்குள் முடிப்பது அவசியம்.
நேரடி நீர்ப்பாசன முறைக்கு பாத்தி, பார் அமைத்து வரிசைக்கு வரி, 60 செ.மீ., என்ற அளவிலும், செடிக்கு செடி 25 செ.மீ., என்ற அளவிலும் பராமரித்து நடவு செய்ய வேண்டும்.
கையால் இயக்கும் உருளை விதைப்பான் கருவியைப் பயன்படுத்தி, 60X25 செ.மீ., என்ற அளவில் இடைவெளியைப் பராமரித்து விதைப்பை, மேற்கொள்ள முடியும்.
நீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில், சொட்டு நீர் பாசனம் அமைத்து இரட்டை வரிசை முறையில் அல்லது இணை வரிசையில், நடவு மேற்கொள்ளலாம்.
இணை செடி வரிசை இடைவெளி 1.5 அடி என்ற அளவிலும், இரண்டு இணை வரிசைக்கு இடையே 2.5 அடி என்ற அளவிலும், இடைவெளி விட்டு நடவு மேற்கொள்ள வேண்டும்.
ஈரம் இருக்கும்போது யூரியா
ஏக்கருக்கு அடியுரமாக 55 கிலோ யூரியா, 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாஷ் உரத்தை, சால்களில் சீராக இட வேண்டும்.
விதைத்த 3 நாட்களுக்குள், மண்ணில் போதிய ஈரப்பதம் இருக்கும்போது, 'அட்ராசின்' களைக் கொல்லியை, ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில், 200 லிட்., நீரில் கலந்து, கைத்தெளிப்பான் வாயிலாக தெளிக்க வேண்டும்.
பயிர் முளைத்த, 15 நாட்களில் படைப்புழு தாக்குதல் இருப்பினும், இல்லாவிடினும், 'குளோரான்டிரானிபுரோல்' பூச்சிக்கொல்லியை 10 லிட்., நீருக்கு 4 மி.லி., என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
விதைத்த 20 நாட்களில், 'டெம்போ ட்ரயோன்' களைக்கொல்லியை ஏக்கருக்கு, 120 மி.லி., வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். முதல் மேலுரமாக, 25வது நாளில் 110 கிலோ யூரியாவை இட வேண்டும்.
ஊட்டச்சத்து குறைக்கு...
பயிர் முளைத்த 35-40வது நாளில், 'எமாமெக்டீன்பென்சோயேட்' பூச்சிக் கொல்லியை 10 லிட்., நீருக்கு 5 மி.லி., வீதம் கலந்து படைப்புழு தென்படாவிட்டாலும் அடிக்க வேண்டும். 2வது மேலுரத்தை, 40-45வது நாளில், 55 கிலோ யூரியாவை மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது இட வேண்டும்.
பூக்கும் மற்றும் பால் பிடிக்கும் தருணத்தில், ஏதாவது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படின், கரையும் உரத்தை(19:19:19), 100 லிட்., நீரில் ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்தி பயனடையலாம். பூக்கும், பால் பிடிக்கும் தருணத்தில், நீர் பற்றாக்குறை இன்றி பார்த்துக் கொள்வது அவசியம்.
விதைத்த பின் முதல் நீர் பாசனத்தையும், மூன்று நாட்களுக்குப் பின் உயிர் நீர் பாசனமும், வாரத்துக்கு ஒரு முறை வீதம் பாசனம் செய்தும், அதிக மகசூல் பெறலாம்.
பயிர் நன்றாக முதிர்ந்த பிறகு, அதாவது பயிரின் பச்சைத் தன்மை மறைந்த பிறகு, 10 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். இயந்திரத்தைப் பயன்படுத்தினால் ஒரே நாளில், 10 ஏக்கர் வரை அறுவடை செய்யலாம்.
குறைந்த செலவில் லாபம்
மணிகள் நன்றாக காய்ந்தபின், ஈரப்பதம் 14 சதவீதத்துக்கு கீழ் உள்ளபோது அறுவடை செய்ய வேண்டும். 12-14 சதவீதம் வரை, நேரடியாக மூட்டை பிடித்து அனுப்பி விடலாம்.
ஈரப்பதத்தை அறிய, ஒழுங்கு முறை விற்பனை நிலையத்தில் கருவிகளைப் பெறலாம். அனுபவமிக்க விவசாயிகளும், கெட்டித்தன்மை அறிந்து தீர்மானிக்கலாம்.
விவசாயிகள் நேரடியாக தொழிற்சாலைகளுக்கும், அரசு விதை வினியோக நிலையங்களிலும் விற்பனை செய்யலாம்; குழுவாக சேர்ந்து, மகசூலை சேமித்து இடைத்தரகர் இன்றி, விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம். மக்காச்சோள சாகுபடி, தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும், இயந்திர மயமாக்கலாலும் எளிதாக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து, குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.