/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை செடிகளுக்கு கை கொடுத்த கோடைமழை
/
தேயிலை செடிகளுக்கு கை கொடுத்த கோடைமழை
ADDED : ஏப் 07, 2025 05:04 AM

வால்பாறை; கோடை மழையால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டதால், தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறையில், தேயிலை தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள் எஸ்டேட்களில் மொத்தம், 32 ஆயிரத்து 825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இதில் தேயிலை மட்டும், 25 ஆயிரத்து, 253 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.இங்குள்ள சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில் மொத்தம், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஐந்து மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால், தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கபட்டதோடு, தற்காலிக தொழிலாளர்களும் வேலையிழந்தனர்.
இந்நிலையில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இடையிடையே பெய்து வரும் கோடை மழையால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இதனால் விடுமுறை நாளான நேற்று, பெரும்பாலான எஸ்டேட்களில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகபட்சமாக கீழ்நீராறு அணைப்பகுதியில், 12 மி.மீ., மழை பெய்துள்ளது.

