/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை மழையால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
/
கோடை மழையால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஏப் 16, 2025 09:46 PM

வால்பாறை, ;கோடை மழை கைகொடுத்ததால், வால்பாறையில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறையில், தேயிலை அதிகம் பயிரிடப்பட்டு, மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்களில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், தேயிலை மட்டும், 25,253 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் தேயிலை துாள் குன்னுார், கோவை, கொச்சி போன்ற ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து பனிப்பொழிவு அதிகரித்ததால், தேயிலை செடிகள் கருகி, உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், எஸ்டேட் பகுதியில் தற்காலிக தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை மழை பரவலாக பெய்கிறது. வெயில் மற்றும் மழையால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு, உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இடியுடன் கனமழை
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்ததால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர். பல்வேறு எஸ்டேட் பகுதியில் மரங்கள் சாய்ந்தன. இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட கோடைமழை கைகொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது, நிலவும் சீதோஷ்ண நிலையால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது,' என்றனர்.