/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை உளவு முறை பயிர்கள் செழிக்க உதவும்
/
கோடை உளவு முறை பயிர்கள் செழிக்க உதவும்
ADDED : மார் 07, 2024 04:31 AM
கிணத்துக்கட : கோடைகாலத்தில் மண் வாயிலாக பரவும் நோயை தடுக்க, கோடை உழவு செய்ய வேண்டும் என, விவசாயிகளுக்கு, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு மற்றும் சுற்று பகுதியில், கோடை காலம் ஆரம்பமாகும் முன்பே விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
கோடை காலம் துவங்கி விட்டதால், மானாவாரி விவசாயிகள், மண் வாயிலாக பரவும் நோய்கள் மற்றும் பூச்சிகள், கூட்டுபுழுக்களை அழிக்க கோடை கால உழவு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மண்ணின் இறுக்கத்தன்மையை குறைக்கவும், அறுவடை முடிந்த நிலங்களில், கோடை காலங்களில் ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதனால், அதிகளவு மண் அரிப்பை தடுக்க முடியும்.
இவ்வாறு செய்தால், அடுத்ததாக சாகுபடி செய்யப்படும் பயிர்கள் செழிக்க அதிக வாய்ப்புள்ளது.
கோடை உழவு செய்வதால், மழை நீர் மண்ணுக்கு அடியில், 10 செ.மீ., முதல் 15 செ.மீ., ஆழத்திற்கு உட்செல்லும். இதனால், நீர் ஆவியாவதை தடுப்பதோடு, வறட்சி காலங்களில் பயிருக்கு தேவையான அளவு நீர் கிடைக்கும்.
மேலும், களைச்செடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட பயிர்களின் அடிப்பகுதி மக்கி பயிருக்கு உரமாகிறது. களைகளின் விதைகள் மேலே வந்து, சூரிய வெப்பத்தால் அழிந்து விடுவதால், களை உற்பத்தி தடுக்கப்படுகிறது.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

