ADDED : மார் 08, 2026 05:32 AM

காலையில் அவசரமாக அலறும் அந்த மிக்சியின் இரைச்சல் இன்று இல்லை...
குக்கரின் விசில் சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு அவசரச் செய்திகளை சொல்லவில்லை....
ஆம்... இன்று ஞாயிறு காலை! திங்கள் முதல் சனி வரை 'வார் ரூம்' ஆக காட்சியளிக்கும் சமையலறைக்குள், வடச்சட்டியும் கரண்டியும் மோதிக்கொள்ளாமல் ஓய்வெடுக்கின்றன.
அவசர அவசரமாக லன்ச் பாக்சில் அடைக்கப்படும் உணவும், 'இன்னும் அஞ்சு நிமிஷம் மா...' எனும் கெஞ்சும் பிஞ்சுகளின் குரல்களும், 'சீக்கிரம் சாப்பிடு' என்று விரட்டும் அம்மாக்களும், ' டைம் ஆச்சு கிளம்பு' என்று பதறும் அப்பாக்களும் இன்று அமைதியாக இருக்கிறார்கள்.
கிச்சனுக்கு லீவு கொடுத்துவிட்டு வெளியே சாப்பிட திட்டமிடுவதும், அல்லது தாமதமாகத் துவங்கும் அந்த 'பிரஞ்ச்' நேரமும் இல்லத்தரசிகளுக்கு வரப்பிரசாதம்.
காபியும், இட்லியும் கூட இன்று வீட்டுக்கதவை தட்டும் வசதி, சமையலறைக்குக் கூடுதல் ஓய்வைத் தருகிறது.
ஞாயிறு காலைகளில் உறங்கும் சமையலறைகள், அது உழைக்கும் கைகளுக்கான ஓய்வு. அடுத்த ஆறு நாட்களின் இரைச்சலைத் தாங்கிக் கொள்ள, இந்த ஒரு நாள் நிசப்தம் ஒவ்வொரு கிச்சனுக்கும் தேவைதான்!
'ஞாயிறு தரும் துாக்கம்' திங்கள் முதல் சனி வரை காலை நேரம் முழுக்க பரபரப்பு. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பின், ஐந்து நிமிடம் அமர்ந்தால் கூட 'அப்பாடா' என்ற நிம்மதி. அதற்குப் பிறகு மீண்டும் வேலைக்குத் தயாராகும் ஓட்டம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அலாரத்தை அணைத்து விட்டு மீண்டும் படுத்துக் கொள்வது பெரிய நிம்மதி. அந்த நாளில் சிக்கன் அல்லது மட்டன் சமைப்பது எழுதப்படாத விதி. - கலைவாணி ராம்நகர்
'ஞாயிறு தரும் எனர்ஜி' பள்ளியில் படித்த காலத்திலும் கூட, ஞாயிற்றுக்கிழமைக்காக இவ்வளவு ஏங்கியதில்லை. இப்போது தான் அதன் மதிப்பு புரிகிறது. அந்த நாள் எங்கள் தொடரோட்ட வாழ்க்கையில் ஒரு சிறிய இளைப்பாறல். பெரிதாக எதுவும் இல்லை; காலையில் இரண்டு, மூன்று மணி நேரம் கூடுதல் துாக்கம் கிடைத்தாலே போதும். அந்த ஓய்வு தான் அடுத்த வாரத்திற்கான எனர்ஜி. -- ரேகா நீலாம்பூர்
'ஞாயிறு தரும் நிதானம்' ஒவ்வொரு நாளும் இன்று என்ன சமைப்பது? என்ற குழப்பத்தில் நாள் தொடங்குகிறது. முடிவெடுத்து விட்டால் சமையலறை ஒரு போர்க்களமாக மாறிவிடும். அதனால் தான் ஞாயிறுக்காக காத்திருக்கிறேன். வேலைகள் அன்றும் இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், கால்கள் அங்குமிங்கும் ஓடாமல், சற்று நிதானமாக செயல்படும். இதுதான் அந்த நாளின் பெரிய சுகம். - திவ்யா போத்தனுார்
