ADDED : ஏப் 09, 2025 10:31 PM
சோமனூர்; விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு, சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிய கூலி உயர்வு கேட்டு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல், 15 ம்தேதி வரை, சோமனூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த, விசைத்தறி கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், சோமனூர் அடுத்த சாமளாபுரத்தில், கோவை, திருப்பூர் மாவட்ட சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, 11 ம்தேதி முதல், ஐந்து நாட்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16ம்தேதி முதல், எங்களின் உற்பத்தி தொடர எவ்வித இடையூறும் செய்யாமல் ஒத்துழைப்பு அளிக்கவும், எங்களது குடோன்களுக்கு வந்து உற்பத்திக்கு இடையூறு செய்யவேண்டாம், என, விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்து வலியுறுத்தி உள்ளதாக, சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறினர்.
