/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலகில் தீமையை அழிக்கும் சூரசம்ஹாரம்!
/
உலகில் தீமையை அழிக்கும் சூரசம்ஹாரம்!
ADDED : ஏப் 10, 2025 09:53 PM

க ந்த சஷ்டி விரதத்தின் நிறைவு நாள் சூரசம்ஹாராரமாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த நாளே சூரசம்ஹாரமாகும். தீமையை அழிக்கும் நாளாகவும் சூரசம்ஹாரம் கருதப்படுகிறது.
உலகில் தீமை தோன்றிக் கொண்டே இருக்கும். அதை அழிப்பதற்கு நன்மையும் ஒரு புறம் தோன்றும். நன்மையின் உருவம் முருகப்பெருமான், தீமையின் உருவம் சூரபத்மன்.
சூரபத்மன் தவம்
சிவபெருமானை நோக்கி, சூரபத்மன் கடும் தவம் செய்கிறார். கடவுள் தோன்றாவிட்டால் உடலின் அங்கங்களை அறுத்து நெருப்பில் போடுவதாக வேண்டி தவத்தை தொடங்குகிறான். கை, கால்களை வெட்டி போட்டு அகோர தவத்தை செய்கிறான். இறுதியாக தலையை வெட்ட செல்லும் போது சிவபெருமான் காட்சியளிக்கிறார்.
சிவபெருமான் மூன்று வரங்களை சூரபத்மனுக்கு கொடுக்கிறார். 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆழ்வதும், போர் செல்வதற்கு இந்திரஞாலத் தேர், பெண் வயிற்றில் தோன்றிய யாரும் தன்னை அழிக்க முடியாது என்பது அந்த வரங்களாகும். அதன்பின், சூரபத்மன் சகோதர்களோடு சேர்ந்து மண் உலகையும், விண் உலகையும் வென்றெடுத்து தேவர்களை அடிமைபடுத்தி அட்டூழியங்கள் செய்கின்றான்.
சூரபத்மனின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட பலரும் சிவபெருமானிடம் முறையிடுகின்றனர். இதையடுத்து சிவபெருமானுடைய ஆறு முகங்களில் இருந்து தோன்றிய நெருப்பு பொறிகளை, வாயு பகவான் ஒன்றாக்கி சரவண பொய்கையில் விடுகிறார். இதை அங்கிருந்த கார்த்திகை பெண்கள் குழந்தைளாக மாற்றி வளர்த்தவுடன் பார்வதி தேவியிடம் கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறாக, ஆறுமுகன் எனும் முருகப்பெருமான் தோன்றுகிறார். சூரனை அழிக்க பார்வதி தேவி தனது முழு ஆற்றலையும் வேலாக மாற்றி முருகனிடம் கொடுக்கிறார்.
சூரசம்ஹார நிகழ்வுக்கு, ஆறு நாட்களுக்கு முன் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து, கையில் காப்பு அணிவித்து கொள்வார்கள். இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வீடுகளிலோ அல்லது பொன்மலை கோவிலுக்கு பக்தர்கள் சென்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
சூரசம்ஹார தினத்தன்று, பொன்மலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்ட பின் சூரசம்ஹார நிகழ்வு துவங்கும்.
அலங்கரிக்கப்பட்ட தேரில், வேலாயுதசுவாமி எழுந்தருளி, கரிய காளியம்மனிடம் பெறப்பட்ட சக்திவேலுடன் பொன்மலையை, வேலாயுதசுவாமி சுற்றி வந்து சூரனை வதம் செய்வார்.
வேலாயுதசுவாமி கோவில் அடிவராத்தில் இருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி - கோவை ரோடு வழியாக வந்து சிவலோகநாதர் கோவில் அருகே, அக்னி மூலையில் முதல் சூரனான தாரகனை வதம் செய்கிறார். மலையின் கன்னி மூலையான தேரோடும் வீதியில், இரண்டாவது சூரனான சிங்கமுகனை வதம் செய்கிறார்.
கிருஷ்ணசாமிபுரம் பகுதியில் மலையின் வாயு மூலையில் மூன்றாவது சூரனான பானுகோபனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், நான்காவது சூரனான சூரபத்மனை மலையின் நிருதி மூலையான (தென்மேற்கு பகுதி) கோவை ரோட்டில் வதம்செய்கிறார்.
சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும், விரதம் இருந்த பக்தர்களுக்கு, புளி, கரும்புசர்க்கரை கரைசலான பானக்கம் மற்றும் வாழைத்தண்டுடன், பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்படும்.
திருக்கல்யாணம்
திருக்கல்யாண தினத்தன்று, பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கும். அதன்பின், மலை கோவிலில் இருந்து சிவலோகநாதர் கோவில் எதிரே உள்ள ஆதிபட்டி விநாயகர் கோவிலில் மாப்பிள்ளை அழைப்புக்கு சென்று, மலைக்கோவிலுக்கு சுவாமியை அழைப்பு நடக்கும்.
தொடர்ந்து, வேலாயதசுவாமி, வள்ளி, தெய்வானை உற்சவ சிலைகள் வைத்து கலச பூஜையும், கணபதி பூஜையும் நடக்கும். தொடர்ந்து பத்தர்களின் பக்தி பாடல்கள் மற்றும் சஷ்டி பாராயணம் செய்த பின், திருகல்யாண உற்சவம் கோலாகலமாக நடக்கும்.

