/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
விழியில் குறை... ஆனாலும் வழி காட்டுகிறார் சுரேஷ்
/
விழியில் குறை... ஆனாலும் வழி காட்டுகிறார் சுரேஷ்
ADDED : ஆக 16, 2025 09:16 PM

பா ர்வை மாற்றுத்திறனாளி என்ற காரணத்துக்காக, பல கல்வி நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்டவர், தடைகளையும் தாண்டி இன்று ஐந்து பாடங்களில் 'நெட்' தேர்ச்சி, ஒன்றில் மாநிலத்தகுதி தேர்வு தேர்ச்சி என, ஆறு வெற்றிகளுடன், தன் போன்று தேர்வு எழுதுவோருக்கு, 'விழியாக' இருந்து வருகிறார், கோவையை சேர்ந்த உதவி பேராசிரியர் சுரேஷ்.
ஈரோடு மாவட்டம், இடைக்காட்டு வலசு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவரது இடது கண், பிறக்கும்போதே பார்வை இழந்திருந்தது; வலது கண்ணில், 10 முதல், 20 சதவீதம் வரை மட்டுமே பார்வை திறன் இருந்தது.
வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார். 647/1100 மதிப்பெண் பெற்றார். மேல்நிலை படிப்பில் கலைப்பிரிவு மட்டுமே இவரால் படிக்க முடிந்தது. கலைப்பிரிவில் கணினி அறிவியல் பாடமும் இருந்ததால், அங்கு படிப்பை தொடர முடியவில்லை.
ஆனாலும் உயர்கல்வியில் முத்திரை பதித்தார் சுரேஷ். எப்படி என அவரே விவரிக்கிறார்...
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வராகி மணிகண்ட சுவாமிகளின் ஆசிரமத்தில் தங்கி, காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1, பிளஸ்2 படித்தேன்; பிளஸ்2வில், 857/1200 மதிப்பெண் பெற்றேன்.
இளநிலை, முதுநிலை ஆங்கிலம் பட்டபடிப்பை ராமகிருஷ்ணா மிஷன் கல்லுாரியில் முடித்தேன். முதல் மதிப்பெண் பெற்று சிறந்த மாணவனாக இருந்ததால், அங்கேயே உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. தற்போது, 16வது ஆண்டாக பணிபுரிகிறேன்.
பாரதியார் பல்கலையில் பகுதி நேரமாக எம்.பில், பிஎச்.டி., முடித்தேன். பின்னர் மதர்தெரசா பல்கலை நடத்திய, மாநிலத்தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தேன்.
யு.ஜி.சி., நெட் தேர்வுகளுக்கு, நேஷனல் கல்லுாரியில் துணை முதல்வராக இருந்த பென்னட் எனக்கு உறுதுணையாக இருந்தார்; 2019ல் 'நெட்' ஆங்கிலப்பிரிவில் தேர்ச்சி பெற்றேன்.
2020ல், பழங்குடி இலக்கியம், 2021ல் மொழியியல், 2023ல் பெண்கள் கல்வி, 2024ல் ஒப்பீட்டு இலக்கியம், 2025ல் இந்திய அறிவு அமைப்பு பிரிவுகளிலும் தேர்ச்சியடைந்தேன்.
-இப்படி அவர் கூறி முடித்தபோது, எப்படி...இப்படி ஒரு சாதனை என மலைப்பாய் இருந்தது.
இன்னும் கேளுங்கள்...நெட் தேர்வுக்கு சேகரித்து வைத்திருந்த தகவல்களை, 'வாட்ஸ் அப் குரூப்' வாயிலாக பகிர்ந்து, 700 மாணவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கிறார். இதில் 30 பேர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
செம பர்சனாலிட்டி இல்ல? இவரை 99441 38137 என்ற எண்ணில் அழைத்து பாராட்டு தெரிவிக்கலாம்.