தையல்நாயகி உடனமர் வைத்தியநாதர் திருமடம் கும்பாபிஷேகம் கோலாகலம்
தையல்நாயகி உடனமர் வைத்தியநாதர் திருமடம் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : மார் 05, 2026 05:11 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தையல்நாயகி உடனமர், வைத்தியநாதர் கோவில் மற்றும் திருமடம் கும்பாபிஷேகம், 63 நாயன்மார்களின் ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்தல் ஆகிய விழாக்கள் நடத்தப்பட்டன.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், அரசமர பிள்ளையார் கோவில் வீதியில், தையல் நாயகி உடனமர் வைத்தியநாதர் கோவில் மற்றும் திருமடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, ஐம்பொன் சுவாமி சிலைகள், 63 நாயன்மார்கள் சிலைகளுக்கு நன்னீராட்டு, விழாக்கள் வேள்வி பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காப்பு அணிவித்தல் நடத்தப்பட்டன. 9:30க்கு, வைத்தியநாதர், தையல்நாயகி உட்பட அனைத்து சுவாமிகள் மீது, தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பின் 63 நாயன்மார்கள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
தொடர்ந்து, ஒளியரசு அருளுரை, சைவ சித்தாந்த பேராசிரியரும், சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவருமான தியாகராசனின் ஆன்மிக சொற்பொழிவு, சுவாமிகளுக்கு அபிஷேகம் அலங்காரம், வைத்தியநாதர் தையல்நாயகி, வள்ளி தெய்வானை முருகருக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. வேள்வி பூஜைகளை, பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மேற்கொண்டனர்.
இன்று காலை குருபூஜை விழா, மாலையில் அம்மையப்பர், நால்வர் பெருமக்கள், 63 நாயன்மார்களின் திருவீதி உலா, கோ--ஆப்ரேடிவ் காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பழைய சந்தைக்கடையில் உள்ள அரச மர பிள்ளையார் கோவில் தையல்நாயகி உடனமர் வைத்தியநாதன் திருமடம் வரை நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, மேட்டுப்பாளையம் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
