/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்ப்பண்பாட்டு மையம் எழுத்தாளர்களுக்கு கவுரவம் படம்: பிரவீனா
/
தமிழ்ப்பண்பாட்டு மையம் எழுத்தாளர்களுக்கு கவுரவம் படம்: பிரவீனா
தமிழ்ப்பண்பாட்டு மையம் எழுத்தாளர்களுக்கு கவுரவம் படம்: பிரவீனா
தமிழ்ப்பண்பாட்டு மையம் எழுத்தாளர்களுக்கு கவுரவம் படம்: பிரவீனா
ADDED : டிச 28, 2025 05:03 AM
கோவை,உலக தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் 12வது ஆண்டு விழா மற்றும் சிற்பி 90ம் அகவை விழா நிகழ்வு, என்.ஜி.பி கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. மையத்தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமைவகித்து நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.
இதில், உ.வே.சா தமிழறிஞர் விருது கவிஞர் ரத்தினத்திற்கும், பெரியசாமித்துாரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் அம்பைக்கும், நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த்தொண்டர் விருது டாக்டர் கணேசன் என்பவருக்கும் வழங்கப்பட்டது. சிறப்பு விருதுகள் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், லோகமாதேவி, சிவா ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது.
விருதுகளை வழங்கி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:
கவிஞன், இலக்கியவாதி அல்லது படைப்பாளி என்பவன் தான் வாழும் காலத்தின் பங்காளியாகவும், சாட்சியாகவும் இருக்கவேண்டும். அப்படி இருந்ததற்கான அடையாளங்கள் படைப்புகளில் புலப்படவேண்டும். இதுபோன்ற படைப்புகள் வழியாகவே நாம் கற்றுக்கொள்கின்றோம்.
மரபுகளின் அச்சுகளில் தான் புதுமையின் சக்கரம் சுழற்கிறது என்பதை நம்புகிறேன். அதே சமயம், மரபு நம்மை ஓர் முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தும் போது; அங்கிருந்து விலகி உங்களுக்கான பாதைகளை, பயணங்களை தேர்வு செய்வதை நவீனத்துவம் கொண்டு செல்கிறது. மரபின் செழுமையை உள்வாங்கி தற்கால தேவைக்கு ஏற்ப எழுத்தாளர்கள் கருத்துக்களை, இளம் தலைமுறைகளிடம் முன்னெடுத்து செல்லவேண்டியது அவசியம்.
உலகம் எங்கும் கொடிகட்டி பறக்கும் தமிழை, தமிழுக்கு உரிய மாண்புகளை, பண்பாட்டு விழுமியங்களை, இலக்கிய செழுமை, மொழி உணர்வை பாதுகாக்கவேண்டியது அவசியம். மரபுடன், நவீனத்தையும் கலந்து நமக்கு மொழி உணர்வை ஊட்டும் படைப்பாளிகள் போற்றுதலுக்குரியவர்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்வின் ஒருபகுதியாக, எழுத்தாளரர் மருதநாயகம் மற்றும் டாக்டர் செல்வராஜ் எழுதி புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், சிற்பி பாலசுப்பிரமணியம், என்.ஜி.பி., கல்விக்குழுமங்களின் இயக்குனர் மதுரா, சி.இ.ஓ., புவனேஸ்வரன், இணை செயலர் நடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

