/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 லட்சம் மரக்கன்று நட இலக்கு; 'கிரீன் கோவை' செயலி அறிமுகம்
/
10 லட்சம் மரக்கன்று நட இலக்கு; 'கிரீன் கோவை' செயலி அறிமுகம்
10 லட்சம் மரக்கன்று நட இலக்கு; 'கிரீன் கோவை' செயலி அறிமுகம்
10 லட்சம் மரக்கன்று நட இலக்கு; 'கிரீன் கோவை' செயலி அறிமுகம்
ADDED : நவ 21, 2024 11:27 PM
கோவை; கோவை மாநகராட்சி பகுதியில், 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. இதை கண்காணிக்க, 'கிரீன் கோவை' என்கிற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் மற்றும் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட உள்ளன. பூங்கா, பள்ளி வளாகம், காலியிடங்கள், விளையாட்டு மைதானங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு நில அளவையர் மூலம் நிலங்கள் அளவீடு செய்து தயார் செய்யும் பணியை நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டு உள்ளனர். ஆறு, வாய்க்கால், ஓடை, ஏரி, குளம் மற்றும் குட்டை கரைகளில் பனை விதை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை, 8,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருக்கின்றன. 20 ஆயிரம் பனை விதைகள் தருவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை கண்காணிக்க, 'கிரீன் கோவை' என்ற செயலி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு வார்டிலும், அந்தந்த பகுதியில் மரக்கன்று நடுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இடம் குறித்த விபரங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் வெளியிடுவர். அந்தந்த வார்டு இன்ஜினியர்கள், மரக்கன்று நட்ட பின், பதிவேற்றம் செய்வர். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து, 10 அடி உயரம் நன்கு வளர்ந்த மரக்கன்றுகள் வாங்கப்படுகின்றன. மழைக்காலத்தில் நட்டு மூன்று மாதம் தொடர்ந்து பராமரித்தால், அதன்பின் தானாக வளர்ந்து விடும்.
இச்செயலி அறிமுக விழா, வடவள்ளி மகாராணி அவென்யூவில் நடந்தது; அமைச்சர் செந்தில்பாலாஜி அறிமுகப்படுத்தினார். எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, கலெக்டர் கிராந்திகுமார், நிலைக்குழு தலைவர்கள் தெய்வயானை, சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''குழி வெட்டுவது, நடுவது, தண்ணீர் ஊற்றுவது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் செயலி மூலம் கண்காணிக்கப்படும். இச்செயலி மூலமாக மாநகராட்சி நிர்வாகமே கண்காணிப்பு பணியில் ஈடுபடும். தன்னார்வ அமைப்பினர் மரக்கன்று நடுவதற்கு முன்வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்,'' என்றார்.