ADDED : செப் 09, 2026 07:21 PM
பொள்ளாச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி டாஸ்மாக் குடோன் முன்பாக, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சுமைப்பணி துணை தலைவர் திருமலை ராஜாராம் தலைமை வகித்தார். கிளை தலைவர் மாயவன் வரவேற்றார். நிர்வாகி காளிதாஸ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு லாரியில் கொண்டு சென்று கடைகள் முன், இறக்கி வைக்கும் பணிக்கு, பெட்டிக்கு, 10 ரூபாய் வழங்க வேண்டும். கடைகளுக்குள் கொண்டு சென்று அட்டி போட்டு அடுக்கி வைப்பதற்கும், பெட்டி ஒன்றுக்கு, கூடுதலாக 5 ரூபாய் வழங்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.
அனைத்து டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் சட்டப்படி, பி.எப்., இ.எஸ்.ஐ., அமல்படுத்த வேண்டும். மதுபான பெட்டிகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது அதிர்வில் உடையும் மதுபாட்டில்களுக்கு உண்டான தொகையை தொழிலாளர்களிடம் வற்புறுத்தி வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
