/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரத்தை சுரண்டும் சுவை; ஆரோக்கியத்துக்கு உலை! உணவு விற்பனையில் அலட்சியம்! கேள்வி கேட்க யாருமில்லை
/
சுகாதாரத்தை சுரண்டும் சுவை; ஆரோக்கியத்துக்கு உலை! உணவு விற்பனையில் அலட்சியம்! கேள்வி கேட்க யாருமில்லை
சுகாதாரத்தை சுரண்டும் சுவை; ஆரோக்கியத்துக்கு உலை! உணவு விற்பனையில் அலட்சியம்! கேள்வி கேட்க யாருமில்லை
சுகாதாரத்தை சுரண்டும் சுவை; ஆரோக்கியத்துக்கு உலை! உணவு விற்பனையில் அலட்சியம்! கேள்வி கேட்க யாருமில்லை
UPDATED : ஆக 13, 2025 08:17 PM
ADDED : ஆக 13, 2025 07:39 PM

பசியாற உணவு சாப்பிட்ட காலம் மாறிவிட்டது. இப்போது, காரசாரமான, வித்தியாசமான உணவு வகைகளை சாப்பிடும் கலாசாரம் வேரூன்றியுள்ளது.
வீட்டில் இருவரும் வேலைக்கு செல்வோராக இருந்தால், சொல்லவே தேவையில்லை... இரவு உணவு ேஹாட்டலில் தான். வாரம் ஒருமுறை குடும்பத்துடன் ேஹாட்டலுக்கு சென்று துரித உணவுகளை ஒருகை பார்த்தாக வேண்டும்.
இதுமட்டுமா, இடையிடையே 'ஸ்நாக்ஸ்' என்ற பெயரில், போண்டா, பஜ்ஜி, மசால் பூரி, பானி பூரி... இப்படி வகைவகையாக வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டே இருக்கணும். இப்படித்தான் ஓடுகிறது இன்றைய நகர வாழ்க்கை.
மக்களின் சுவை அறிந்தே, ேஹாட்டல்களிலும், தினந்தினம் ஒரு ஸ்பெஷல் மெனு போடுகின்றனர். ரோட்டோர கடைகளிலும், காரசாரமாக உணவு வகைகள் விற்கின்றனர்.
மக்களின் தேவையறிந்து, இட்லி, தோசை, ஆப்பம் மாவு வகைகள், சந்தகை, இடியாப்பம், புரோட்டா, சப்பாத்தி போன்றவை வீடு வீடாக சென்று விற்கின்றனர். ஆனால், இவற்றில் சுகாதாரம் எந்தளவுக்கு கடைபிடிக்கப்படுகிறது என்பதை யாருமே கண்டுகொள்வதில்லை.
பொள்ளாச்சி நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில், சுகாதாரமின்றி தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் கலப்படம் வாடிக்கையாகவே உள்ளது. காரசாரமான சுவை, நிறத்துக்காக பயன்படுத்தும் பொருட்களால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.
தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெறாமல் கடைகள் அமைத்தல் என, விதிமீறல்கள் தொடர்கிறது. மக்கள் இடையேயும் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.
இதுஒருபுறமிருக்க, பஸ் ஸ்டாண்ட், முக்கிய சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்களில், போண்டா, பஜ்ஜி, சுண்டல் உள்ளிட்ட தின்பண்டங்கள் சுகாதாரமின்றி திறந்தவெளியில் விற்கின்றனர்.
வாகன புகை, புழுதி பறந்து உணவுபொருட்களில் படிகிறது. இதனை உட்கொள்ளும் போது, பசியின்மை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்உபாதைகள் ஏற்படும். சில கடைகளில், கண்ணாடி பெட்டி அமைக்கப்பட்டிருந்தாலும், அதனை முறையாக மூடி வைப்பதில்லை. இடுக்கி அல்லது கையுறை பயன்படுத்தி தின்பண்டங்களை சப்ளை செய்வதில்லை.
பள்ளி நேரத்தில் நடமாடும் கடைகள் அமைத்து, சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில், கூடையில் திறந்தவெளியில் வைத்து தின்பண்டங்களை விற்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில், பஸ்களில் ஏறி, இறங்கி, பழ வகைகள், நிலக்கடலை, சுண்டல் வகைகளை சுகாதாரமின்றி விற்கின்றனர்.
ரோட்டோர தள்ளுவண்டி கடைகள், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு இல்லாமல், செயல்படும் கடைகளில் எந்த சுகாதார நடவடிக்கைகளும் இல்லை.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். இதனால், ஆழியாறு பகுதியில் பூங்கா முன்பாக இருக்கும் கடைகளிலும், வால்பாறையிலும் திறந்தவெளியில் உணவு பொருட்கள் சுகாதாரமின்றி விற்கின்றனர். ேஹாட்டல்கள், பேக்கரி கடைகளில் காலாவதியான குளிர்பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
கிணத்துக்கடவில், ரோட்டோர தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமின்றி உணவு பொருட்கள் விற்கின்றனர். பானிபூரி கடைகளில், துாசு படிந்த ஈரத்துணியால் உணவு பொருட்களை மூடி வைக்கின்றனர்.
உணவு பொருட்களை விற்போருக்கு இது வாழ்வாதாரமாக இருக்கலாம். ஆனால், இவற்றை உண்போருக்கு உடல்உபாதை ஏற்படும் என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. உணவு பாதுகாப்பு துறையினரும் அலட்சியமாக உள்ளனர்.
தொடர் ஆய்வு அவசியம்!
ராஜகோபால், ஆலாமரத்துார், உடுமலை: தள்ளுவண்டி கடைகள் மட்டுமின்றி, ேஹாட்டல்கள், பேக்கரிகளிலும் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. உடுமலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதியிலுள்ள தள்ளுவண்டி கடைகளில், திரும்ப, திரும்ப பயன்படுத்தும் சமையல் எண்ணெய், ரசாயன பொருட்கள் கலந்து, குப்பை, மண் விழுந்த உணவுகள் தரமற்ற முறையில் விற்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், சூளேஸ்வரன்பட்டி: மக்கள் பலரும், விதவிதமான உணவுகளை உட்கொள்ளவே விருப்பம் காட்டுகின்றனர். மக்களின் பொருளாதார நிலைக்கேற்ப புதிது புதிதாக உணவு சார்ந்த கடைகளும் திறக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்பு துறையி னர், மக்களுக்கு தரமான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து உடனுக்குடன் முடிவுகளை அறிந்து கொள்ள, நடமாடும் ஆய்வகங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், கடையில் உணவின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தால், உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
ஜெயசந்திரன், வால்பாறை: வால்பாறையில், சாலையோரக்கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுலாபயணியருக்கு தரமான உணவு வழங்கும் வகையில், துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் உணவு தரமாக இருந்தால் தான், வால்பாறை வரும் போது, அந்த கடைகளை தேடிச்சென்று சுற்றுலா பயணியர் சாப்பிடுவர். ஒரு வருமானத்தை பார்க்காமல், தரமான உணவு வழங்கி, நிலையான பெயர் பெற வேண்டும்.
கண்ணன், கிணத்துக்கடவு: பெரும்பாலான ரோட்டோர கடைகளில் சுகாதாரம் இல்லை. வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து உணவு வழங்கப்படுகிறது. எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை அச்சிட்ட பேப்பர்களில் வைத்து தருவதால், உணவு பொருளில் ரசாயன கலப்பு ஏற்படுகிறது. பார்சல் வாங்கினாலும் சூடான உணவு பொருட்களை பாலித்தீன் கவரில் பார்சல் செய்து கொடுக்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்பி வரும் மக்களுக்கு, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும்.
- நிருபர் குழு -