/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி சிறப்பு முகாம்களில் வரி வசூல் 'டல்!' நகராட்சி, பேரூராட்சிகளில் 'சூப்பர்'
/
ஊராட்சி சிறப்பு முகாம்களில் வரி வசூல் 'டல்!' நகராட்சி, பேரூராட்சிகளில் 'சூப்பர்'
ஊராட்சி சிறப்பு முகாம்களில் வரி வசூல் 'டல்!' நகராட்சி, பேரூராட்சிகளில் 'சூப்பர்'
ஊராட்சி சிறப்பு முகாம்களில் வரி வசூல் 'டல்!' நகராட்சி, பேரூராட்சிகளில் 'சூப்பர்'
ADDED : ஏப் 03, 2025 11:50 PM

பெ.நா.பாளையம் : நகராட்சி, பேரூராட்சிகளில் வரி வசூல் ஏறக்குறைய முழுமையாக நடந்தது. ஆனால், ஊராட்சிகளில் வரி வசூலில், மந்த நிலையே நீடிக்கிறது.
தமிழகம் முழுவதும் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி வசூலிப்பதற்காக உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பு முகாம்களை அமைத்து, கடந்த, 31ம் தேதி வரை வரி வசூலில் ஈடுபட்டன.
பொதுமக்கள் வரி செலுத்துவதற்காக ஊரக வளர்ச்சி துறை சார்பில், தனி இணையதளம் துவக்கப்பட்டது. இது தவிர, ஊராட்சி செயலாளர்களுக்கு மின்னணு கருவி வழங்கப்பட்டு, அவற்றின் வாயிலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு, வரி வசூல் செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஊராட்சிகளில், ஊராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு தெருவிலும், சிறப்பு முகாம் நடத்தி வரி வசூலில் ஈடுபட்டனர். மேலும், குப்பை அள்ளும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 'ஸ்பீக்கர்' களில் அனைவரும் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி விரைவாக செலுத்த வேண்டும் என, தொடர் அறிவிப்புகள் செய்யப்பட்டன.
76 சதவீதம்
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கூடலூர் நகராட்சி நிர்வாகம், 98 சதவீதம் வரி வசூல் செய்து, தமிழக அளவில் உள்ள நகராட்சிகளில் மூன்றாம் இடத்தை பெற்றது. பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிகள், 98 சதவீதம் வரி வசூல் செய்தன. ஆனால், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வரி வசூல் செய்யும் பணி மந்தகதியிலேயே நடந்து வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சொத்து வரி வசூலில், வீரபாண்டி ஊராட்சியில், 78 சதவீதம், அசோகபுரம்,74, பிளிச்சி,73, சின்னதடாகம், 92, குருடம்பாளையம்,79, நாயக்கன்பாளையம், 81, நஞ்சுண்டாபுரம்,72, பன்னிமடை, 73, சோமையம்பாளையம், 72, என சராசரியாக, 76 சதவீதம் ஒன்றிய ஊராட்சிகளில் வசூல் ஆனது.
குடிநீர் வரி, வீரபாண்டி ஊராட்சியில், 51சதவீதம், அசோகபுரம், 49, பிளிச்சி,63, சின்ன தடாகம்,75, குருடம்பாளையம், 63, நாயக்கன்பாளையம், 69, நஞ்சுண்டாபுரம், 58, பன்னிமடை, 55, சோமையம்பாளையம், 53, என, சராசரியாக, 59 சதவீதம் குடிநீர் வரி வசூல் ஆனது.
சுணக்கம் ஏன்?
உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'தமிழகத்தில் சில இடங்களில் வரி வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் கடுமை காட்டியதால், அப்பகுதியில் இருந்த அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சம்பவத்தின் எதிரொலியாக சில அதிகாரிகள் வரி வசூல் செய்யும் பணியில் சுணக்கம் காட்டினர். மேலும், பெரும்பாலான இடங்களில் புதிதாக வீடு கட்டியவர்கள் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மட்டுமே தானாக முன்வந்து வரியை செலுத்தும் வழக்கத்தை கொண்டு இருக்கின்றனர்.
ஊராட்சி பகுதிகளில் சிலர் வரி செலுத்தாமலேயே உள்ளனர். அரசிடம் உரிய அனுமதி பெற்று அவர்களிடமும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

