/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிமென்ட்டுக்கு வரி சலுகை மக்களை சென்றடையாது! 'கிரெடாய்' கவலை
/
சிமென்ட்டுக்கு வரி சலுகை மக்களை சென்றடையாது! 'கிரெடாய்' கவலை
சிமென்ட்டுக்கு வரி சலுகை மக்களை சென்றடையாது! 'கிரெடாய்' கவலை
சிமென்ட்டுக்கு வரி சலுகை மக்களை சென்றடையாது! 'கிரெடாய்' கவலை
ADDED : செப் 05, 2025 10:26 PM

கோவை; 'சிமென்ட்டுக்கான வரியை குறைத்துள்ள போதிலும், அதன் விலையை உற்பத்தியாளர்கள் ஏற்கனவே உயர்த்தியதால், வரிகுறைப்பின் பலன் நுகர்வோரைச் சென்றடையாது' என, கிரெடாய் கவலை தெரிவித்துள்ளது.
'கிரெடாய்' கோவை தலைவர் அரவிந்த்குமார் கூறியதாவது:
ஜி.எஸ்.டி.,யை 2 அடுக்குகளுக்குள் கொண்டு வந்து, வரி குறைப்பை அறிவித்ததை 'கிரெடாய்' மனப்பூர்வமாக வரவேற்கிறது. கட்டுமானத் துறையில் சிமென்டுக்கு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்., துவக்கத்திலேயே சிமென்ட் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தி விட்டனர். இதனால், வரிக்குறைப்பின் பலன் கட்டுமானத் துறைக்கு, குறிப்பாக அதன் இறுதி நிலை நுகர்வோருக்கு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
வரி குறைப்பு என்பது, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொகுசு வீடுகளில் எதிரொலிக்காது. அவற்றில், 20 முதல் 30 சதவீதமே கட்டுமான செலவாக இருக்கும். பெரும்பான்மை நிலத்தின் மதிப்பாக இருக்கும். எனவே, ரூ.60 லட்சம் மதிப்பிலான கட்டுபடியாகும் விலையிலான பிரிவில்தான் இந்த விலைக்குறைப்பு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், வரிக்குறைப்பு அமலாவதற்கு முன்பே, சிமென்ட் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தியதால், அரசின் அறிவிப்பு, நுகர்வோரைச் சென்றடைவது சிரமம். இதுதொடர்பாக, கிரெடாய் உட்பட கட்டுமானத் துறை சார்ந்து அரசிடம் வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கோரிக்கையை பரிசீலிங்க
ஜெகதீஸ் சந்திரன், செயலர், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா): முழு செயற்கை இழை மதிப்புச் சங்கிலியையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. மனமார வரவேற்கிறோம். பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி விலக்குக்கு மத்திய நிதியமைச்சருக்கு நன்றி. 10 ஆண்டுகளாக ஏற்றுமதி வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கநிலை, உற்பத்தித் திறனை 30 சதவீதம் வரை செயலற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
அசல் தொகையை திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை 2 ஆண்டுக்கு நீட்டித்தல், இ.சி.எல்.ஜி.எஸ்.,ன் கீழ் 30 சதவீத பிணையமில்லா கடனை 5 சதவீத வட்டி மானியத்துடன் எம்.எஸ்.எம்.இ., மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் நீட்டித்தல், மார்ஜின் மணியை 10 சதவீதமாக குறைத்தல், கிரெடிட் வரம்பை 3 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக அதிகரித்தல், உச்ச பருத்திப் பருவத்தில் கொள்முதல் செய்யும் பருத்திக்கு 5 சதவீத வட்டி மானியத்தை வழங்கல் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
நிர்வாக சுமை குறையும்
கல்யாண சுந்தரம், மாநில பொது செயலாளர், லகு உத்யோக் பாரதி: இச்சீர்திருத்தங்கள், இந்தியாவின் மறைமுக வரி அமைப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக இருக்கும். இந்த முக்கியமான சீர்திருத்தங்களால், நிர்வாகச் சுமை குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். போட்டித்திறன் உயரும். இதனை மகிழ்வோடு வரவேற்கிறோம்.
இவ்வாறு, கூறியுள்ளனர்.