/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனிப்பொழிவால் தேயிலை உற்பத்தி பாதிப்பு
/
பனிப்பொழிவால் தேயிலை உற்பத்தி பாதிப்பு
ADDED : பிப் 18, 2025 10:00 PM

வால்பாறை; தேயிலை உற்பத்தி குறைந்து வருவதால், தற்காலிக தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.
வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில், மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இதில், தேயிலை மட்டும், 25,253 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
இங்குள்ள, சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில் மொத்தம், 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வால்பாறையில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, குன்னுார், கொச்சி போன்ற ஏல மையத்துக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பருவமழைக்கு பின் கடந்த இரண்டு மாதங்களாக தேயிலை உற்பத்தி அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் நிலவுகிறது.
இதனால், சில எஸ்டேட்களில் பனியால் தேயிலை செடிகள் கருகியதோடு, உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தி குறைவால், தற்காலிக தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''வால்பாறையில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை செடிகள் துளிர்விட முடியாத நிலையில் உள்ளது. பரவலாக காணப்படும் பனிப்பொழிவால், சில எஸ்டேட்களில் தேயிலை செடிகள் கருகியுள்ளன.
''தேயிலை செடிகள் பனிப்பொழிவால் மேலும் கருகாமல் இருக்க உரிய மருந்து தெளிக்கப்படுகிறது. கோடை மழை பெய்தால், ஏப்ரல் மாதம் மீண்டும் தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றனர்.