/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை தொழிலாளர் புதிய சம்பள பேச்சு தோல்வி; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/
தேயிலை தொழிலாளர் புதிய சம்பள பேச்சு தோல்வி; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தேயிலை தொழிலாளர் புதிய சம்பள பேச்சு தோல்வி; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தேயிலை தொழிலாளர் புதிய சம்பள பேச்சு தோல்வி; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ADDED : செப் 28, 2025 11:42 PM
வால்பாறை; வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த ஜூலை மாதம் முதல் புதிய சம்பளம் வழங்க வேண்டும்.இந்நிலையில் புதிய சம்பளம் வழங்க கோவையில் உள்ள தனியார் தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில், ஐந்தாவது கட்ட பேச்சு வார்த்தை நடந்தது.
தமிழ்நாடு தோட்ட அதிபர் சங்க செயலாளர் பிரதீப்குமார், ஆனைமலை தோட்ட அதிபர் சங்க தலைவர் அருண், பாரிஆக்ரோ துணைத்தலைவர் முரளிபடிக்கல், டீ எஸ்டேட் இந்தியா முதுநிலை பொதுமேலாளர் ரஞ்சித்கட்டபுரம், முடீஸ் குரூப் மேலாளர் திம்பையா, வாட்டர்பால்ஸ் பொதுமேலாளர் விக்ரம், ஜெயஸ்ரீ எஸ்டேட் குருப் பொதுமேலாளர் பரிதோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கத்தின் சார்பில், அண்ணாதொழிற்சங்க பேரவை தலைவர் அமீது, சவுந்திரபாண்டியன்(எல்.பி.எப்.,), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) கேசவமருகன் (வி.சி.,) உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தோட்ட அதிபர்கள் சங்க நிர்வாகிகள் பேசியதாவது:
நீலகிரி மற்றும் வயநாட்டில் கடந்த, ஜூலை 1ம் தேதி முதல் 475 ரூபாய் சம்பளம் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதன் படி வழங்கப்படுகிறது. இதே ஒப்பந்தப்படி தான் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்க முடியும். நிலுவைத்தொகை வழங்க இயலாது.
தமிழக அரசு டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்குவதில்லை. எனவே, எங்களை கட்டாயப்படுத்துவதில் எந்த விதத்திலும் நியாயமில்லை. இவ்வாறு, பேசினர்.
தொழிற்சங்க தலைவர்கள் பேசியதாவது:
ஜூலை மாதம் முதல் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தப்படி நிலுவைத்தொகை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை கட்டாயம் வழங்க வேண்டும்.
மேலும் நீலகிரி, வயநாடு பகுதியில் போடப்பட்ட புதிய சம்பள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு, பேசினர்.
இதற்கு தோட்ட அதிபர்கள் சங்கத்தினர் மறுப்பு தெரிவித்ததால், ஐந்தாவது முறையாக புதிய சம்பள பேச்சு வார்த்தை தோல்வில் முடிந்தது. இதனையடுத்து, புதிய சம்பள பேச்சு வார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.