ADDED : ஆக 20, 2026 07:22 PM
-– நிருபர் குழு –: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், உடுமலை வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி நடந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் தமிழ் அண்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் காளிதாஸ், தேசிய ஆசியர் சங்க ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளர் சத்யராஜ் நன்றி தெரிவித்தார்.
* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சார்பில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ஈஸ்வரி தலைமையில் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார செயலாளர் கனிராஜு, வட்டார துணை செயலாளர் திருமூர்த்தி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை பழைய நடைமுறைப்படி வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். நிதி குறையை சீர் செய்து கல்விக்கு முழு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
* பொள்ளாச்சியில், வட்டார கல்வி அலுவலகம் முன், கவன ஈர்ப்பு கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
