பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் ஆசிரியர், மாணவர்கள் மகிழ்ச்சி
பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் ஆசிரியர், மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 13, 2026 06:25 AM

வால்பாறை: நீண்ட கால போராட்டத்திற்கு பின், பள்ளிகளில் பராமரிப்பு பணி துவங்கியுள்ளதால், ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு காரணங்களால், வார்டுகளில் எவ்வித வளர்ச்சிப்பணிகளும் முறையாக நடக்கவில்லை. இந்நிலையில் வால்பாறை நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மேற்கூரை மழை காலத்தில் ஒழுகுவதால், பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை இருந்தது.
இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். பல முறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில் கிடப்பில் உள்ள வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், துவக்கப்பள்ளிகளில் பராமரிப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை நகராட்சி பொறியாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, ''அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, வால்பாறை, நகர், நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் பராமரிப்பு பணி, 14 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும்,'' என்றார்.
