அன்று முதல் இன்று வரை பிரியாத தொழில்நுட்பமும் தொழில்துறையும்
அன்று முதல் இன்று வரை பிரியாத தொழில்நுட்பமும் தொழில்துறையும்
ADDED : பிப் 02, 2026 05:07 AM
கோவையின் தொழில்துறை மரபு, சங்க காலத்திலேயே துவங்குகிறது. சூலுார், கோவில்பாளையம், வெள்ளலுார் போன்ற பகுதிகளை சுற்றியிருந்த வளமான நிலங்களில் பருத்தி பயிரிடப்பட்டு, கி.மு. 3ம் நுாற்றாண்டிலேயே ஜவுளிப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன.
இவை கலிங்க தேசத்துக்கு வணிகமாக எடுத்துச் செல்லப்பட்டன. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மட்பாண்டங்கள், நீலக்கற்கள், சங்கு வளையல்கள் அந்தக் காலத்து தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தின. ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்திலும், கோயம்புத்தூர் தொழில்நுட்ப அறிவில் முன்னிலையில் இருந்தது. திப்பு சுல்தான் பிரெஞ்சு தொழில்நுட்பத்தை இங்கு அறிமுகப்படுத்தினார்.
பின், கிழக்கிந்தியக் கம்பெனி பண்டமாற்று வணிகத்தைத் தொடங்கி, உயர்தர பட்டுத் துணிகளை ஏற்றுமதி செய்தது. தொழிற்புரட்சியின் தாக்கத்தால் நீராவி, நுாற்பு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1804ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
1861-ல் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சிக்கான முதல் படி எடுக்கப்பட்டது. 1862ல் ரயில் சேவை துவங்கியது. பள்ளிகள், கல்லுாரிகள் உருவாகி, 1887ல் முதல் நுாற்பாலை நிறுவப்பட்டது. ராபர்ட் ஸ்டேன்ஸ் தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவித்தார். ஜி.டி.நாயுடு, பின்னாளில் கோயம்புத்தூர் தொழில்துறையின் முக்கிய முகமாக உயர்ந்தார். 1911-ல் எண்ணெய் எஞ்சின் இயக்கம், 1921ல் பேருந்து சேவை, 1924-ல் தொழிற்கல்விப் பள்ளி தொடக்கம் ஆகியவை நகரின் தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்தின.
1931ல் மின்சாரம் வந்த பின், தொழிற்சாலைகள் பெரும் மாற்றம் கண்டன. இரண்டாம் உலகப் போரின் போது கோயம்புத்தூர், தென்னிந்தியாவின் முக்கிய தொழில்துறை மையமாக விரிவடைந்தது.
