/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்நுட்ப மைய கட்டுமான பணிகள் 'டாப் கியர்!': சிறு, குறு, நடுத்தர நிறுவனத்தினர் மகிழ்ச்சி
/
தொழில்நுட்ப மைய கட்டுமான பணிகள் 'டாப் கியர்!': சிறு, குறு, நடுத்தர நிறுவனத்தினர் மகிழ்ச்சி
தொழில்நுட்ப மைய கட்டுமான பணிகள் 'டாப் கியர்!': சிறு, குறு, நடுத்தர நிறுவனத்தினர் மகிழ்ச்சி
தொழில்நுட்ப மைய கட்டுமான பணிகள் 'டாப் கியர்!': சிறு, குறு, நடுத்தர நிறுவனத்தினர் மகிழ்ச்சி
ADDED : பிப் 23, 2026 05:45 AM

சூலுார்: கோவை அடுத்த அரசூரில், ரூ.200 கோடி மதிப்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் தொழில்நுட்ப மைய கட்டுமான பணிகள் வேகம் எடுத்துள்ளதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில், தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கேரளாவில் கொச்சி, தமிழகத்தில் கோவை, புதுச்சேரி உட்பட 18 இடங்களில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கோவையில் மையம் அமைக்க, சூலுார் அடுத்த அரசூரில், கால்நடைத் துறைக்கு சொந்தமான 14.6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநில அரசு, எம்.எஸ்.எம்.இ., துறைக்கு ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
மையம் அமைக்கும் பணிக்கு, ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தில் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எல்லை வரையறுக்கப்பட்டு, தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப மையம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மேம்பட்ட தொழில்நுட்ப ஆதரவு, திறன் மேம்பாடு மற்றும் வணிக ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்க, நாடு முழுவதும் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்து, தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதே திட்டத்தின் நோக்கம். அரசூரில் அமையவுள்ள மையத்துக்கு திட்ட செலவு, ரூ.200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் கூட்டாண்மையில், உருவாக்குதல், செயல்படுத்துதல், பரிமாற்றம் எனும் முறையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சுவர் கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. தொடர்ந்து, பிரதான கட்டடங்கள் கட்டும் பணிகள் துவங்க உள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தொழில்துறையினர் கூறுகையில், 'சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் பெரும்பாலானோர், தொழில்நுட்ப திறமை கொண்டவர்கள். அவர்களை மேலும் மெருகேற்ற இம்மையம் உதவும். தங்கள் தொழிலை மேம்படுத்தவும், அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் இம்மையம் வழிகாட்டும், என நம்புகிறோம்.
உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள தேவையான ஆலோசனை, வழிகாட்டுதல் கிடைக்குமானால், நாங்களும் பல மடங்கு உழைப்பை தர தயாராக உள்ளோம்' என்றனர்.

