/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்துறைக்கு மின்வாரியம் ஒத்துழைக்க 'டேகா' வலியுறுத்தல்
/
தொழில்துறைக்கு மின்வாரியம் ஒத்துழைக்க 'டேகா' வலியுறுத்தல்
தொழில்துறைக்கு மின்வாரியம் ஒத்துழைக்க 'டேகா' வலியுறுத்தல்
தொழில்துறைக்கு மின்வாரியம் ஒத்துழைக்க 'டேகா' வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2025 10:25 PM
கோவை; எம்.எஸ்.எம்.இ., தொழிற்துறை இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், மின்கட்டண உயர்வை ஒத்திவைத்து, தொழில்துறைக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என, மின்வாரியத்தை டேகா வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் (டேகா) தலைவர் பிரதீப் வெளியிட்டுள்ள அறிக்கை:
புவிசார் அரசியலில் நிலையற்ற தன்மை, உள்நாட்டு தொழிற் சிக்கல்கள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் முரண்பாடுகளால் ஆற்றல் சந்தையில் ஏற்பட்டுள்ள தடை, வணிக வழிகள், நிதிசார் சிக்கல்கள் ஆகியவை, தமிழக தொழில்துறையை குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள், ஏற்றுமதி சார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தேவை குறைவு, மின்கட்டண உயர்வு, நிதிச் சிக்கல்களால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான சரியான நேரம் இதுவல்ல.
கடந்த 2024ல் கடைசி காலாண்டில் தொழில்நிறுவனங்களின் சராசரி மின் நுகர்வு 11 ஆயிரத்து 200 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இது, 2025 முதல் காலாண்டில் 8.03 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் செயலாக்க திறன் 74 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தித் துறை ஏற்றுமதி, 18,500 கோடி ரூபாயில் இருந்து, 14, 200 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
உற்பத்திச் செலவில் மின் கட்டண செலவு 14.5 சதவீதத்தில் இருந்து, 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. எம்.எஸ்.எம்.இ., துறையின் கடன் திருப்பிச் செலுத்தாத அளவும் உயர்ந்துள்ளது.
இத்தரவுகள், தமிழக உற்பத்தித் துறையின் முதுகெலும்பாகத் திகழும் எம்.எஸ்.எம்.இ., தொழில்நிறுவனங்களின் நிலையை தெளிவுபடுத்துகின்றன.
எனவே, ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணத்தை, குறைந்தது ஓராண்டுக்கு அமல்படுத்தக்கூடாது. பொருளாதார நிலைகள் மேம்படும் வரை தற்போதைய மின்கட்டண விகிதமே தொடர வேண்டும். சிறப்பு நிவாரணங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
மின்கட்டண உயர்வை ஒத்திவைப்பது, தொழில்துறையைப் பாதுகாக்கும். எனவே, இக்கட்டான சூழலில் தமிழக மின்வாரியம் தொழிற்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.